குலசேகரப்பட்டினம் தசரா விழா - நாளை மகிஷாசூரசம்ஹாரம்
உடன்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த செப் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு திருக்கோலத்தில் வீதிஉலா நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இன்று இரவு (5ம் தேதி) இரவு 9 மணிக்கு கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. முக்கிய திருவிழாவான நாளை (6ம் தேதி) காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதானை, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயிலில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து இரவு 1 மணிக்கு வானவேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர் செய்து வருகிறார். தசரா விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications