தஃபாரெஜ்- ஜித்தா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வருடந்தோறும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' என்னும் 'நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கடந்த 16-ம் தேதி ஹோட்டல் இம்பாலாவில் நடைப்பெற்றது. இதில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.
வந்திருந்த அனைவருக்கும் நோன்பு கஞ்சி, பேரீச்சம் பழம், சமோசா, பக்கோடா, பழ வகைகள், பழச்சாறு, கடல் பாசி மற்றும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக இந்திய துணைத் தூதரகத்தைச் சேர்ந்த திரு. முபாரக் (ஹஜ் கன்சுளார்), திரு. மூர்த்தி (சமுதாய நல கன்சுளார்), திரு. தாஸ் ஜெயக்குமார் (பாஸ்போர்ட் பிரிவு துணை-கன்சுளார்), ஜித்தா தமிழ் மன்றம், ஜெட்டா தமிழ் சங்கம், நம் நாடு, ஜிஆர்ஐடி(GRIT), மெப்கோ (MEPCO), ஐஎப்டி (IFT), ஹோப் டோஸ்மாஸ்டர்ஸ் கிளப் (HOPE Toastmasters Club) மற்றும் தமிழ் தாவா கமிட்டி ஆகிய அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்-அமான் கிராஅத்துக்குப் பின், சாலிஹ் மரைக்கார் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் “ஷேக் வஜ்டி அக்காரி" இஸ்லாத்தின் நெறிமுறைப்படி வாழ்ந்தால் எப்படி எந்தப் பிரச்சனைகளிலும் எளிதாக வெற்றிப் பெறலாம் என்று ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மல்லப்பன், சித்திக் மதனி, கமாலுதீன் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் அவசியத்தைப் பற்றியும் பேசியதோடு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தஃபாரெஜ்-ஜித்தாவின் சமூக சேவையை பாராட்டினர்.
நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் அறுசுவை (இரவு) விருந்து பரிமாறப்பட்டது.
முன்னதாக பீர் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நவாஸ் நன்றியுரை கூறினார்.












Click it and Unblock the Notifications