வந்தாச்சு தீபாவளி.... பட்டாசு வெடிக்கும் போது பத்திரம்...
தீபாவளி தினத்தில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பதில்தான் குட்டீஸ்களுக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்படும். பட்டாசு வெடிப்பது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விபத்து நேர்ந்து சிறு காயம் ஏற்பட்டால் கூட பண்டிகை நாளில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். எனவேதான் பட்டாசு வெடிக்கும் போது பத்திரமாக கையாளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஒருவேளை விபத்து நேரிட்டால் மேற்கொள்ளவேண்டிய முதலுதவி சிகிச்சைகளையும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.

தரமான பட்டாசுதானா?
காசு செலவழித்து பட்டாசு வாங்கினாலும் தரமானதை வாங்கவேண்டும். அதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள். தரம் குறைந்த பட்டாசுகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிக சப்தம் வேண்டாமே!
ஒருசிலர் டமால், டமால் என்ற அதிரடியாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளைத்தான் விரும்புவார்கள். இதனால் நமக்கு காது செவிடாவதோடு வயதான முதியவர்கள், குழந்தைகளுக்கு மனரீதியாக சிக்கலை ஏற்படுத்திவிடும்.

எங்கே? எப்படி வெடிக்கணும்?
புதிய ரக பட்டாசு வாங்கும் போது எப்படி வெடிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டு வெடிப்பது உடல் நலத்துக்கு பாதுகாப்பானது.
பட்டாசுகளை திறந்த வெளி மைதானங்களில்தான் கொளுத்த வேண்டும். தொழிற்சாலைகள், குடிசைப் பகுதிகள், பெட்ரோல் பங்க்குகள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கவேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரை. சாலைகளில், அல்லது வாகனங்கள் வரும் போதும், போகும் போதும் அங்கே பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

தண்ணீர் அவசியம் வேண்டும்.
காலில் செருப்பு அல்லது ஷு போட்டுத்தான் பட்டாசு வெடிக்கவேண்டும். எந்த வெடியையும் கையில் வைத்துக் கொளுத்தக்கூடாது.ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே. சில நேரங்களில் பாட்டிலும் சேர்ந்து வெடித்து விடலாம். பட்டாசு வெடிக்கும் போகு பக்கத்தில் தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள். இது தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றி குளிர்விக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

புத்தாடைகள் பத்திரம்
நைலான்,பட்டுத்துணிகளால் நெய்த ஆடைகள், காற்றில் பறக்கும் ஆடைகள், எல்லாம் வேண்டாம். பட்டாசு கொளுத்தும்போது காற்றடித்தால், அல்லது மத்தாப்பு தெறித்து லூசாக இருக்கும் ஆடைகளில் தீப்பிடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

முகமும் கண்களும் பத்திரம்
பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது. வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.

தண்ணீரில் கழுவுங்கள்
பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராத விதமாக நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச், அழுத்தாமல் சுற்றி உடனடியாக காயம்பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

கண்ணில் காயம் பட்டால்
வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
பண்டிகை நாட்களில் விபத்து நேர்ந்தால் அது மனரீதியான சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்தால் மட்டுமே மகிழ்ச்சிகரமான பண்டிகையை கொண்டாட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications