சிலிக்கன்வேலியில் தமிழ் திருவிழா: சாலமன் பாப்பையா பட்டிமன்றம்
சான் பிரான்சிஸ்கோ: சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் போராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் கடந்த 4ம் தேதி பிரிமாண்ட் நகரில் நடைபெற்றது.
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றமும், கவிஞர் அறிவுமதி அவர்களின் சிறப்பு பேச்சும் பிரிமாண்ட் நகரில் கடந்த 4ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்க்கையில் வெற்றி பெறப் பெரிதும் தேவை? தடைகளைத் தாண்டும் தைரியமே! நெளிவு சுளிவு கண்டு நீந்தும் நிதானமே! என்பதாகும்.
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் தனக்கே உரிய நகைச்சுவை கலந்த தமிழாற்றலுடன் சுவாரஸ்யமாக பட்டிமன்றத்தை நடத்தினார். வளைகுடா பகுதி தமிழ் பேச்சாளர்கள் அவருக்கு ஈடு கொடுத்து மிகவும் சிறப்பாக பேசினர்.
கவிஞர் அறிவுமதி அவர்கள் தமிழர்களின் உயிர் நேயம் என்ற தலைப்பில் சங்க காலத்திலிருந்து இந்த காலம் வரை தமிழர்கள் மனித நேயத்தை தாண்டி அனைத்து உயிர்களையும் நேசித்த வரலாற்றை பழமையான இலக்கியங்களிலிருந்து மேற்கோளோடு விளக்கி பேசினார். சாலமன் பாப்பையா அவர்கள் குறள் நெறி என்ற தலைப்பில் திருக்குறள் நெறி பற்றியும், திருக்குறள் எவ்வாறு, யாரால் தமிழக மக்களிடையே பரவியது மற்றும் திருவள்ளுவர் பற்றிய கதைகள் தோன்றிய வரலாறு பற்றியும் விளக்கினார்.
அவினாசிலிங்கம் தமிழ் துறை பேராசிரியர் சுமதி அவர்கள் அமெரிக்க தமிழர்களை அறிவியல் சார்ந்த கருத்துகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டுகோள் விடுத்தார். இந்த விழாவில் 700க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மே 3ம் தேதி சாலமன் பாப்பையா மற்றும் அறிவுமதி ஆகியோருடன் இரவு உணவுடன் கூடிய சந்திப்புக்கும் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவின் தொடர்ச்சியாக பாவலர் அறிவுமதி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் மற்றும் கவிதைப் பட்டறை கடந்த 5ம் தேதி அன்று பிரிமாண்ட் நகரில் நடைபெற்றது. பாவலர் அறிவுமதி அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான, ஆழமான உரையில் தமிழார்வலர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். கடந்த சில நாட்களாக கவிஞர் அறிவுமதி வளைகுடா பகுதியில் பல்வேறு குழு சந்திப்புகள் மூலம் அமெரிக்க தமிழ் மக்களை படைப்பிலக்கியத்தில் ஈடுபட ஊக்கபடுத்தி வருகிறார்.
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...






Click it and Unblock the Notifications
