திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள்
திருப்பாவை - 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். கிங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாயா சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே என்று கூறி கண்ணனை எழுப்புகின்றனர். கண்ணனின் பார்வைக்கு அத்தனை சக்தி இருக்கிறது என்று கேட்கிறாள் ஆண்டாள்.
திருப்பள்ளி எழுச்சி - 2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.
பொருள்: திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சூரியன் கிழக்கு திசையில் உதித்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி வெளிச்சத்தை கொடுத்து விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட் டன. பூக்கள் மலர்ந்ததைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் ரீங்காரமிட்டு இசை பாடத் தொடங்கின. திருப்பெருந்துறையில் உறைந்துள்ள அழகிய பெருமானே, அருள் செல்வத்தை வாரி வழங்கும் ஆனந்த மலையே, அலைகள் அடிக்கும் கடலே, பள்ளி எழுந்தருளாய்.












Click it and Unblock the Notifications