ஹார்வர்ட் பல்கலை தமிழ் இருக்கைக்காக ஒஹியோவில் மொய்விருந்து.. 30,000 டாலர்கள் வழங்கிய தமிழர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒஹியோ: ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒஹியோ தமிழர்கள் 30,000 டாலர்களை மொய் விருந்து நடத்தி நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும்.

தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது.

தமிழ் இருக்கைக்கு நன்கொடை

தமிழ் இருக்கைக்கு நன்கொடை

இந்நிலையில் ஹார்வர்ட் தமிழ் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ஒஹியோ பகுதியை சேர்ந்த தமிழர்கள் மொய் விருந்து நடத்தினர். இதில் 30000 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட்டு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

மொய் விருந்து நிகழ்ச்சி

மொய் விருந்து நிகழ்ச்சி

தன் இன்பத்தைப் பெரிதாக எண்ணாமல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கில், சுமார் 75 ஒஹியோ மாநிலத் தமிழ் தன்னார்வலர்கள் இணைந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 21-ம் நாள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, மேரிஸ்வில் நகரில் முத்தமிழையும் ஒரே குடும்பமாகக் கொண்டாடும் பெரு விழாவை மொய் விருந்து நிகழ்ச்சியுடன் சிறப்பாக அரங்கேற்றினர்.

திகட்டத் திகட்ட..

திகட்டத் திகட்ட..

வாசலில் நம் தமிழ் மண்ணின் சான்றான கோலமிட்டு வந்தோரை வரவேற்றனர். வந்த அனைவருக்கும் உடனடியாக தமிழர்களின் அறுசுவை மொய்விருந்து உணவு மணக்க மணக்க திகட்டத் திகட்ட தாராளமாய் பரிமாறப்பட்டது. தமிழர்கள் அலை அலையென திரண்டு கிட்டத்தட்ட 650 க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி அரங்கை நிறைத்தனர்.

எங்கும் தமிழ் மணம்

எங்கும் தமிழ் மணம்

எங்கும் தமிழ் மணம்! சுவர்களில் முச்சங்கத்தில் வாழ்ந்த அரசர்கள், நூல்கள், ஆண்டுகள் பற்றிய விவரங்கள், இந்தத் தலைமுறை 40,000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட முச்சங்க மரபினர் என்பதைத் தெளிவாகக் காட்டிற்று. அது மட்டுமில்லாமல், தமிழ்க் குழந்தையர் அனைவரும் பட்டாடை உடுத்தி, பொன்னியின் செல்வன் காலத்தில் காவிரியில் நடக்கும் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவை நினைவூட்டுவது போல் கலகலப்பாக வந்திருந்தனர்.

வெற்றிக்கோப்பைகள்

வெற்றிக்கோப்பைகள்

தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி தொடங்கியது, நிகழ்ச்சி நடைபெற அனைத்து உதவிகளையும் வாரி வழங்கிய வள்ளல் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பிறகு 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றுக் கொண்ட ஓவியப்போட்டியின் இறுதிச்சுற்று 'ஐந்திணை' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து டப்ஸ்மேஷ் போட்டி, மாறுவேடப்போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, தேக்கரண்டியும் எலுமிச்சம் பழமும், இசை இருக்கைப் போட்டி என்று பல போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளும் பெரியவர்களும் ஆர்வமாய் பங்கேற்று வெற்றிக் கோப்பைகள் பெற்றனர்.

மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகள்

மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகள்

இடையிடையே 5 அதிரடியான அழகான அற்புதமான நடனங்களைத் தமிழ் குழந்தைகளும், பெரியவர்களும் இணைந்து மேடையில் அரங்கேற்றம் செய்து, மக்களை உற்சாகப்படுத்தினர். 'மேசன் ரிதம்ஸ்' என்ற இசைப்பட்டறைக் குழு சின்சினாட்டி நகரிலிருந்து, மேரிஸ்வில் வந்து, மக்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தினர். 40,000 ஆண்டு தமிழர் தொன்மையும், தொல்காப்பியமும் என்றத் தலைப்பில் வழங்கப்பட்ட உரை பல அரிய உண்மைகளை மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்தது. மேலும் மெஹந்தி, முக வர்ணனை, புகைப்படச் சட்டம் போன்றவைகளும் மக்களைக் கவர்ந்தன!

ரூ.20 லட்சம்

ரூ.20 லட்சம்

தமிழ் இருக்கையின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் நிகழ்ச்சியில் பங்குப்பெற்று சிறப்புரை ஆற்றினார். மொய் விருந்து நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட 30,000 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இருபது லட்சம்) தமிழ் இருக்கை அமைய ஒஹாயோ வாழ் தமிழர்கள் சார்பாக வெற்றிச்செல்வன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும், ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் 'பங்கேற்பாளர் சான்றிதழ்கள்' வழங்கப்பட்டது

இது முடிவு அல்ல

இது முடிவு அல்ல

இந்த நிகழ்வு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக இத்துணை பெரியத் தொகை திரட்டப்படது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
தமிழ் மேல் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து, ஒற்றுமையாய்ச் செயல்பட்டுத் தமிழ் வளர, எந்தக் கைமாறும் எதிர்நோக்கா மழை போல், இணைந்து இயங்கியிருப்பது, அளப்பரிய சாதனை என்றால் அது மிகையாகாது. தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் எத்துணை பெரிய சாதனை செய்ய இயலும் என்பதற்கு ஒஹியோ தமிழர்களின் இம்முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இது முடிவு அல்ல, தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டும் தொடக்கமே என்கின்றனர் ஒஹியோ வாழ் தமிழர்கள் !!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Ohio Tamils have donated $ 30,000 to the Tamil chair of the Harvard Universit by Moivirunthu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற