மார்கழி பூஜை – திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள்

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
திருப்பள்ளி எழுச்சி - பாடல் 6
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்: பரப்பற்ற (நிலமற்ற) இடத்தில் தவம் செய்து உன்னை உணர்ந்த யோகியரும், பந்தபாசங்களை விட்டொழித்தவர்களும், மை தீட்டிய கண்களை உடைய பெண்களைப் போன்று தங்களை பாவித்துக்கொண்டு உன்னைத் தொழுகிறார்கள்.
உமையின் மணவாளனே! சிவந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! எமது பிறப்பை நீக்கி, ஆட்கொண்டு அருளும் எம்பெருமானே! எங்கள் வாழ்வுத் துயரம் குறைத்து, எம்மன உயரம் உயர்த்த எழுந்தருள்வாய் சிவனே!
திருப்பாவை - பாடல் 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் 7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய்!திருப் பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு?அது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்: சிவபெருமானே! உன்னை வர்ணிக்கலாம். வரையறுக்க முடியாது. நினைத்தாலே இனிக்கும் அமுதம் நீ. நாக்கில் தங்கும் நல்ல பழச்சுவை நீ! சுவைத்தவர்கள் சொல்கிறார்கள். அறிந்து கொள்வதற்கு அரியவனோ, எளிமையானவனோ என்று தேவர்களும் அறியமாட்டார்கள். இதுதான் இவனது திருவுருவம், இவனே இறைவனாகிய நீ என நாங்கள் அறிந்து கொள்ளும்படியும், எங்களை ஆட்கொள்ளும்படியும் இவ்விடத்தில் எழுந்தருள்வாயாக! தேன் ஒழுகும் பூவனங்களையுடைய உத்தரகோசமங்கையில் உறைபவனே! திருப்பெருந்துறையில் கோயில் கொண்டுள்ள மன்னவனே! சிவனே! எம்மை ஆட்கொண்டருள, நாங்கள் உனக்கான திருப்பணிகளை எவ்வழியில் செய்யவேண்டும் என்று கேட்கிறோம், துயில் நீங்கி எழுந்தருள்வாய்!












Click it and Unblock the Notifications