For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெய் பீம்:வன்னியர் சமுதாயத்தை குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

By BBC News தமிழ்
|

சமீபத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து இன்றுவரை இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது, அதில் எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 'ஜெய் பீம்' திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

இந்த படம் வெளியான நாள் முதல் நடிகர்களின் நடிப்பு, கதைக் கரு, உண்மை சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பங்களிப்பு, கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்கு, காவல்துறையினரால் கொல்லப்பட்ட ராசாகண்ணு, உண்மையான செங்கேணி பார்வதி என பலரைக் குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறினர். கதையில் வரும் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரை அந்தோணி சாமி என்றில்லாமல் குருசாமி என மாற்றியதும், ஒரு காட்சியில் அந்த அதிகாரியின் வீட்டின் நாட்காட்டியில் குறிப்பிட்ட சாதி அடையாளத்தோடு கூடிய படம் இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது.

https://twitter.com/rameshlaus/status/1456970947173371909

இதனைத் தொடர்ந்து, படத்தில் நாட்காட்டி காட்சி மாற்றப்பட்டது. ஆனால் சர்ச்சை முடிந்த பாடில்லை. நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வந்தால், அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.

அதே போல வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரிப்பதாகவும், அதற்கு கோடி கணக்கில் நஷ்ட ஈடு கோரியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தியின் உண்மைதன்மையை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்குரைஞர் பாலுவிடம் கேட்ட போது தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். மயிலாடுதுறை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

"வன்னியர் சமூகத்தைக் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவதற்கு எதிராக, 2டி எண்டர்டெயின்மெண்ட், அமேசான், சூர்யா, ஜோதிகா உட்பட ஐந்து பேருக்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி சார்பாக நோட்டீஸ் அனுப்பி இருப்பது உண்மை தான்" என கூறினார்.

நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பது என்ன?

ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு போக, வன்னியர் சங்கத்தின் அக்னி குண்ட இலச்சினையை நீக்குவது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது உள்ளிட்டவற்றுடன் மேற்கொண்டு தவறான தகவல்களை பிரசுரிக்காமல் இருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை இதை செய்யத் தவறினால், சட்டப்படி கிரிமினல் வழக்கு மற்றும் நஷ்ட ஈடுக்கு சிவில் வழக்கு தொடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vanniyar sangam sends Legal notice to Actor Suriya and Amazon over Jaibhim film

இப்படி நஷ்ட ஈடு கேட்டு, பாமக தரப்பில் நோட்டீஸ் வழங்கப்படுவதற்கு முன்பே, பாமகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவை நோக்கி பல கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

https://twitter.com/draramadoss/status/1458336431244337155

படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்! என்கிற அன்புமணியின் பதிவுக்கு விடையளிக்கும் விதத்தில் நடிகர் சூர்யாவும் ஒரு கடிதத்தை தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் தனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை என்றும், சிலர் சுட்டிக்காட்டிய பிழையும் உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு விடையளித்திருந்தார்.

மேலும், படைப்புச் சுதந்திரம் என்கிற பெயரில் எந்த ஒரு சமூகத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற கருத்தை ஏற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார் சூர்யா.

https://twitter.com/Suriya_offl/status/1458793791469469697

அன்புமணி ராமதாஸின் கேள்வி மற்றும் சூர்யாவின் பதிலுக்கு இணைய பயனர்கள் பலரும் அப்பதிவுகளின் கீழ் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ஐஜி பெருமாள் சாமியாக நடித்த பிரகாஷ் ராஜ், இந்தி மொழியில் பேசும் ஒருவரை அடித்தது, நீதிபதி சந்துரு மட்டுமே இந்த வழக்கில் பணியாற்றவில்லை, மற்ற வழக்குரைஞர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்களிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது என பல்வேறு விமர்சனங்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, காவல்துறையின் இந்த கொடூர செயலால் தன் கணவர் ராசாகண்ணுவை இழந்த பார்வதி (உண்மையான செங்கேணி) அம்மாளுக்கு, சூர்யா 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Vanniyar sangam sends Legal notice to Actor Suriya and Amazon over Jaibhim film
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X