ஒரே ஆண்டில் 50,000+ வேலைகளை பறித்த AI.. எந்த துறைகளில் பாதிப்பு அதிகம்? 4 முக்கிய பாயிண்டுகள்
சியாட்டில்: AI வந்துவிட்ட பிறகு உலகெங்கும் வேலைவாய்ப்புத் துறை வேகமாக மாறி வருகிறது. ஏகப்பட்ட துறைகளில் ஏஐ காரணமாக வேலையிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நடப்பாண்டில் மட்டும் ஏஐ காரணமாகச் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகள் நேரடியாகப் பறிபோய் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
இந்த நவீனக் காலத்தில் ஏஐ மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI நமக்குப் பல்வேறு வழிகளில் உதவுகிறது. மருத்துவம் தொடங்கிப் பல துறைகளில் மனிதர்களின் வாழ்க்கையை ஏஐ எளிமையாக மாற்றியுள்ளது. மேலும், உலகெங்கும் இருந்து மிகப் பெரியளவில் முதலீடுகளும் ஏஐ நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

1. வேலைவாய்ப்புகள் மாறுகிறது
உலகெங்கும் வேலைவாய்ப்புகளை ஏஐ மொத்தமாக மாற்றி அமைக்கிறது. ஒரு காலத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட பணிகளைக் கையாள ஜெனரேட்டிவ் AI கருவிகளைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றன. கோடிங் உதவி, சப்போர்ட், டேட்டா அனாலடிக்ஸ் என எல்லா ஐடி துறைகளிலும் ஏஐ வந்துவிட்டது. இதன் மூலம் செயல்திறனையும் உற்பத்தியையும் அதிகரிக்க ஐஐ நிறுவனங்கள் விரும்புகின்றன.
ஏஐ என்பது சோதனை என்ற நிலையில் இருந்து வெளியே வந்துவிட்டது. நிஜமாகவே வேலைவாய்ப்புகளைக் காலி செய்ய ஏஐ ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவில் இப்போது இருக்கும் வேலைகளில் 11.7 சதவீத வேலைகளை ஏஐயால் செய்ய முடியுமாம். இதன் மூலம் $1.2 டிரில்லியன் டாலர் ஊதியத்தைச் சேமிக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் பேரின் வேலைவாய்ப்புகளும் கூட கடுமையாகப் பாதிக்கப்படும்.
2. ஏஐ தான் பிரதானம்
உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் AIஐ அடிப்படையாகக் கொண்டு தனது வேலையை மாற்றி அமைக்கிறது. நடப்பாண்டில் மட்டும் மைக்ரோசாப்ட் சுமார் 15,000 பணிநீக்கங்களைச் செய்துள்ளது. அங்கு ஏஐ என்பது அனைத்துத் துறைகளிலும் முக்கிய பங்காற்ற ஆரம்பித்துவிட்டதாம். ஏஐ வளர வளர அங்கும் வேலையிழப்புகள் அதிகரிக்கலாம் என்ன அஞ்சப்படுகிறது.
3. ஆடோமேஷன்
அதேபோல இந்த ஆண்டு அமேசான் நிறுவனம் 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சுமார் 40 சதவீதம் பேர் பொறியாளர்களாகும். ஆடோமேஷன் மூலம் அதிக வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையத்திற்குப் பிறகு தொழில்நுட்ப உலகில் வந்த மிகப் பெரிய மாற்றம் ஏஐ என்கிறார் அமேசான் துணைத் தலைவர் பெத்.
4. கஸ்டமர் சப்போர்ட்
அதேபோல சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தில் பல ஆயிரம் பேரை AI நீக்கியுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் கஸ்டமர் சப்போர்ட்டில் இருந்த 4,000 பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். AI தான் இப்போது கஸ்டமர் சப்போர்ட்டில் 50 சதவீதம் வரை கையாள்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அங்கு 9000 பேர் கஸ்டமர் சப்போர்ட்டில் வேலை செய்த நிலையில், இப்போது அது 5000ஆக குறைந்துவிட்டதாம். மேலும், பல்வேறு துறைகளிலும் AIஐ கொண்டு வரும் முயற்சியில் சேல்ஸ்போர்ஸ் இறங்கியுள்ளது.
இந்த 3 நிறுவனங்களுமே சிறு எடுத்துக்காட்டு தான். உலகெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஏஐ காரணமாக ஆட்குறைப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது. உலகளவில் சுமார் 41% நிறுவனங்கள் ஏஐ காரணமாக ஆட்குறைப்பைச் செய்யும் என உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது. இது நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications