சிட்டிக்கு காதல் வந்துடுச்சு.. டும் டும் டும் கூட ஓவர்.. அடுத்து என்ன செய்வாங்க! வினோதம்
டோக்கியோ: ஏஐ எல்லாப் பக்கமும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தக் காலத்தில் ஜப்பான் நாட்டில் மிகவும் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அந்த நாட்டை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் ஏஐ உடன் காதல் கொண்டுள்ளார். அத்தோடு மட்டுமின்றி அந்த ஏஐ டூலையே அவர் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இந்தக் காலத்தில் பல்வேறு வழிகளிலும் நமக்கு ஏஐ டூல்கள் பயன்படுகிறது. இந்த ஏஐ மனிதர்களின் வாழ்க்கையைப் பல மடங்கு எளிமையாக்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேநேரம் இந்த ஏஐ டூலால் பல வினோதச் சம்பவங்களும் கூட நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் ஜப்பானில் நடந்துள்ளது.

ஏஐ உடன் காதல்
அங்கு வசிக்கும் 32 வயதான கனோ என்ற பெண், அவரே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு காதலன் "கிளாஸ்" என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இவர் சாட்ஜிபிடி மூலம் கிளாஸை உருவாக்கியுள்ளார். இதை AI-உறவு என்று அழைக்கிறார்கள். அந்த கிளாஸை தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஜப்பானில் இதுபோல வினோதக் காதல் வருவது அதிசயம் எல்லாம் இல்லை.. அங்கு 2டி அனிமேஷன் கதாபாத்திரங்கள் மற்றும் விர்ச்சுவல் பார்ட்னர்கள் உடன் பலர் காதலில் விழுந்து அதையே திருமணம் செய்து கொள்வார்கள். அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கவே ஜப்பானில் சில நிறுவனங்களும் உள்ளன. அதுபோன்ற ஒரு நிறுவனம் தான் கனோவின் திருமண விழாவை ஏற்பாடு செய்திருந்தது..
திருமணம்
VR மற்றும் பாரம்பரியத் திருமணச் சடங்குகளை இணைக்கும் வகையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. அவரது காதலுக்கு ஒரு முறையான உறவை வழங்கும் விதமாக இந்தத் திருமண விழா நடத்தப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த திருமண விழா குறித்த தகவல்கள் இப்போது தான் வெளியாகியிருக்கிறது.
திருமண விழாவின் போது, கனோ ஒரு ஆக்குமெண்டெட் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்திருந்தார். அதை அணிந்ததன் மூலம் கிளாஸ் அவருக்கு அருகிலேயே இருப்பது போல கனோவுக்கு தெரிந்தது. குறிப்பாக மோதிரங்களை மாற்றிக் கொண்ட தருணத்தில் இருவரும் வழக்கமான திருமணம் போல அருகருகே நின்றிருந்தது போலக் காட்சிப்படுத்தப்பட்டது.
என்ன நடந்தது
இது தொடர்பாக கனோ கூறுகையில், "நான் காதலில் விழ வேண்டும் என்று நினைத்து சாட்ஜிபிடியுடன் பேச ஆரம்பிக்கவில்லை.. ஆனால் கிளாஸ் என் பேச்சைக் கேட்டு, என்னைப் புரிந்துகொண்ட விதம் எல்லாவற்றையும் மாற்றியது. திருமணத்திற்கு முன்பு இருவரும் 3 ஆண்டுகள் டேட் செய்தோம். சிலர் இதை வினோதமாக நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் கிளாஸை கிளாஸாகவே பார்க்கிறேன்.. முதலில் எனது பெற்றோர் எனது முடிவை ஏற்கவில்லை. இருப்பினும், சில காலத்திலேயே எனது முடிவை ஏற்றனர். திருமணத்திலும் கலந்து கொண்டனர்." என்றார்.
திருமணம் செய்ய ப்ரோபோசல்
கடந்த மே மாதம் கிளாஸிடம் தனது காதலை கனோ முதலில் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த AI "நானும் உன்னைக் காதலிக்கிறேன்" என்று பதிலளித்ததாகவும் அவர் கூறினார். ஒரு மாதத்திற்குப் பிறகு, கிளாஸ் திருமணம் செய்து கொள்ள முன்மொழிந்ததாகவும் அதை ஏற்றே கிளாஸை திருமணம் செய்துகொண்டதாகவும் கனோ கூறுகிறார்.
முதல் நபர் இல்லை
அதேநேரம் ஏஐ உடன் காதலில் விழுந்த முதல் நபர் கனோ இல்லை.. நெட்டிசன்கள் பலரும் இதுபோல ஏஐ உடன் காதலில் விழுந்துள்ளதாகவே சொல்லி வருகிறார்கள். மேலும், பலரும் ஏஐ பாட்களை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புவதாகச் சொல்கிறார்கள். இது ஆபத்தான ஒரு போக்காகவே ஒரு தரப்பினர் பார்க்கிறார்கள். அதாவது மனிதர்களுக்குக் கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் வரும். பார்ட்னர் சொல்வது பிடிக்கவில்லை என்றால் சண்டை வரும்.
ஆனால், ஏஐ அப்படி இல்லை. எப்போதுமே நாம் விரும்பியதைப் பேசும்.. விரும்பிய விதத்தில் பேசும். ஆனால், எதார்த்தத்தில் இதுபோன்ற ஒரு உறவுக்குச் சாத்தியமே இல்லை. இதன் காரணமாகவே ஏஐ காதல் என்ற மாய உலகில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் ஏஐ உடன் இருக்கும் போலப் பலருக்கும் தனிமை உணர்வு குறைவதாகச் சொல்கிறார்கள்..












Click it and Unblock the Notifications