கேரளாவில் உருவாக்கப்பட்ட முதல் ஏஐ யானை.. கோவில்களிலும் பயன்படுத்தலாம்.. அந்திக்காடு AI செய்த சாதனை!
திருச்சூர்: கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில், தொழில்நுட்பமும், பாரம்பரியமும் ஒன்றிணையும் விதமாக இந்தியாவின் முதல் முழு உருவ செயற்கை நுண்ணறிவு (AI) யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, a2i2 (ஆந்திகாட் AI இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. விழாக்களில் உயிருள்ள யானைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இந்த ஏஐ யானை உருவாக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
AI யானை: கலாச்சார குறியீடு
இந்திய கலாச்சாரத்தில் யானைகள், வலிமை, நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. திருச்சூர் பூரம் போன்ற திருவிழாக்களில் யானைகள் அலங்கரிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் ஒன்றுகூடுவது வழக்கம். எனினும், இதுபோன்ற நிகழ்வுகளில் விலங்குகளின் நலன் குறித்த கவலைகள் இருந்து வருகின்றன. நீண்ட நேரம் இவை சங்கிலியில் கட்டப்படும் அவலங்களும் நடக்கின்றன. உதாரணமாக, 2025 ஆம் ஆண்டு, அகமதாபாத்தில் நடைபெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை உதாரணமாகக் கொள்ளலாம். சில நேரங்களில் பட்டாசு சத்தத்திற்கு யானைகள் மிரண்டு ஓடி உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிலையில்தான் கேரளாவில் ஏஐ யானைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இரண்டு வருட ஆராய்ச்சி மற்றும் உழைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த AI யானை, விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் முழு உருவ செயற்கை நுண்ணறிவு (AI) யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, a2i2 (ஆந்திகாட் AI இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஒரு ரோபோவாக இருந்தாலும், இது மற்ற ரோபோக்களைப் போல அல்ல.. ஏஐ நுட்பத்துடன் செயல்படக்கூடியது. இதை உருவாக்க உயர்நிலை ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏஐ யானை: உயர்தர ரோபோட்டிக்ஸ்
உயர்தர ரோபோட்டிக்ஸ், சென்சார்கள், ஆழமான கற்றல் மாதிரிகள் மற்றும் தகவமைப்பு நிரல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது உண்மையான யானையைப் போலவே மெதுவாக நகரும்; மேலும், சுற்றுச்சூழலை உணர்ந்து, மக்களுக்கு ஏற்றபடி எதிர்வினையாற்றும். எதிர்பாராத நிகழ்வுகளில், அதன் நடத்தையை மாற்றியமைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டிவ் AI பயிற்சி மூலம் உண்மையான யானைகளின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ரோபோ யானை, உண்மையான யானைகளைப் போலவே செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சாதாரண AI திட்டம் அல்ல; விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட உயிரியல் பிரதி (Bio-mimicry) முயற்சியாகும். இதன்மூலம், கலாச்சாரமும் + ஏஐயும் ஒன்றாக கரம் கோர்த்து உள்ளது.
டாக்டர் கே.பி. உன்னிகிருஷ்ணன்: திட்டத்தின் மூளை
இந்தத் திட்டத்தை ஆந்திகாட் AI இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் டாக்டர் கே.பி. உன்னிகிருஷ்ணன் வழிநடத்துகிறார். அவர் AI துறையில் 40 வருட அனுபவம் கொண்டவர். உலக அளவில் AI வளர்ச்சியில் அவர் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜான் ஹோப்ஃபீல்ட் போன்ற விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். AI வளர்ச்சிக்கு உதவுவதில், டாக்டர் உன்னிகிருஷ்ணன் முக்கியப் பங்காற்றி வருகிறார்
டாக்டர் உன்னிகிருஷ்ணன் கூறுகையில், "இந்த AI யானை வெறும் ரோபோ அல்ல. இது சூழ்நிலையை உணர்ந்து செயல்படக்கூடியது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை, நமக்கு இருக்கும் திறமையை இது காட்டுகிறது," என்றார். திருச்சூரில் உள்ள ஆந்திகாட் நிறுவனம் சிறியதாக இருந்தாலும், உலகின் மிகச் சிறந்த பல AI திட்டங்களில் பணியாற்றி வருகிறது. வணிக நோக்கம் இல்லாமல், ஏஐ வளர்ச்சி, ஆராய்ச்சி என்ற குறிக்கோளுடன் இந்த நிறுவனம் செயல்படுகிறது.
AI யானையின் பல பரிமாணங்கள்
AI யானை தற்போது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இதன் தொழில்நுட்பத்தை பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். நகரும் திறன், சுற்றுச்சூழலை உணரும் திறன் மற்றும் நிகழ்நேரத்தில் கற்றுக் கொள்ளும் திறன் ஆகியவற்றின் காரணமாக இதை பல பயன்பாடுகளுக்கு களமிறக்க முடியும். பேரிடர் மேலாண்மை, தானியங்கி போக்குவரத்து, கல்வித்துறை உள்ளிட்ட பல பிரிவுகளில் ரோபோக்களை உருவாக்க இது உதவும்.
குரல் அறிதல், கணினிப் பார்வை மற்றும் இயற்கை மொழி புரிதல் போன்ற அம்சங்களுடன், இது மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதாவது சுற்றுசூழலை உணர்ந்து, மக்கள் எப்படி செயல்படுகிறார்கள் , என்ன பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து இது செயல்படும். இந்த நுட்பத்தை மருத்துவ சிகிச்சை, கிராமப்புறக் கல்வி மற்றும் பல துறைகளில் பயன்படுத்த முடியும். சுருக்கமாகச் சொன்னால், இந்த யானை AI மற்றும் இயற்கை இணைந்து செயல்படுவதற்கான ஒரு மாதிரி.

ஏஐ யானை: இது ஒரு ஆரம்பம் தான்
இந்த வெற்றி குறித்து டாக்டர் உன்னிகிருஷ்ணன் கூறுகையில், "இது ஒரு ஆரம்பம் தான். இந்தியா AI ஐப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை உலகிற்கு காட்ட விரும்புகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஏஐ யானை வடிவமைக்கப்பட்டு உள்ளது.. இந்த AI யானை ஒரு இயந்திரம் மட்டுமல்ல. இயந்திர யானைகளை நாம் இப்போது பயன்படுத்துவது போல அல்ல இது.. இது மக்கள் பேசுவதை, இயற்கை சூழலை உணர்ந்து செயல்படக்கூடியது.. இயற்கையான யானை போல செயல்படும்.. ஆனால் ஏஐ மூலம் செயல்படும்" என்றார்.
இன்றைய உலகில், AI பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முதல்முறையாக ஏஐ யானை ஒன்று உருவாக்கப்பட்டு அது மக்களுடன் மக்களாக களமிறக்கப்பட்டு பயன்படுத்துவது இதுவே முதல்முறை. இந்தியாவின் ஏஐ ஆராய்ச்சிக்கு, வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது.
கேரளாவில் உருவான இந்த AI யானை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாரம்பரியத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இது, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மூலம் சமூகத்தில் பல அசாத்திய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications