AI சொல்வதை அப்படியே நம்பினால் மனித குலத்திற்கே ஆபத்து.. மைக்ரோசாப்ட் ஏஐ தலைவர் பகிரங்க வார்னிங்
சியாட்டில்: உலகில் ஏஐ மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கிடையே ஏஐ மூலம் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ தலைவர் முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார். ஏஐ நேரடியாக ஆபத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் மனிதர்களால் அது ஆபத்தானதாக மாறலாம் என்பதை அவர் எச்சரித்துள்ளார்.
ஏஐ இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. குறுகிய காலத்தில் ஏஐ துறை வேற லெவலில் வளர்ந்து வருகிறது. இது மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் ஏஐ காரணமாக வேறு பல ஆபத்துகளும் இருப்பதாக வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

மைக்ரோசாப்ட் ஏஐ தலைவர்
அப்படித் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ தலைவர் முஸ்தபா சுலைமான் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்., செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மிகவும் உயிர்ப்புடன் இருப்பது போலத் தோன்றுவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். ஏஐ சைக்கோசிஸ் என்ற நிகழ்வில் பேசிய சுலைமான், இந்த புதிய ஏஐ மாடல்கள் மிக எளிதாகத் தங்களுக்கும் உணர்வுகள் இருப்பதாக மக்களை ஏமாற்றி நம்ப வைக்கும் என எச்சரித்துள்ளார்.
சிக்கல் என்ன
அதேநேரம் ஏஐ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து உலகையே ஆக்கிரமித்துவிடும் என சிலர் சொல்லும் நிலையில், அந்தளவுக்கு எல்லாம் நிலைமை செல்லாது என்கிறார் சுலைமான். மாறாக, பொதுமக்கள் தான் ஏஐ பற்றி தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டார். அதாவது, பொதுமக்கள் பலரும் ஏஐ மாடலை ஒரு கடவுளாகவோ, காதலராகவோ அல்லது டிஜிட்டல் நபராகவோ கருதி, அதற்கு உணர்வு உண்டு என்று நம்பத் தொடங்குவார்கள் என்றும் அதுவே அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குடியுரிமை கூட கேட்கும்
இது தொடர்பாக அவர் மேலும், "மிக விரைவிலேயே ஏஐ ஒரு உணர்வுப்பூர்வமான ஒன்று என்ற மாயையைப் பலரும் உறுதியாக நம்பத் தொடங்குவார்கள் என்பது தான் எனது முக்கிய கவலை. இதனால், அவர்கள் விரைவில் ஏஐ உரிமைகள், ஏஐ நலன் மற்றும் ஏஐ குடியுரிமைக்குக் கூட ஆதரவாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இதுவே எனக்கு இப்போது கவலையாக இருக்கிறது" என்றார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் கூட இதேபோன்ற முடிவுகளே தெரிய வந்துள்ளன. அதாவது ஏஐ அமைப்புகள் உணர்வுப்பூர்வமானவை இல்லை என்றாலும், விரைவில் அவை உணர்வுகளைப் பெற்றுவிடும் என்று பெரும்பாலான 2கே கிட்ஸ் நம்புகிறார்களாம். அதே சமயம், ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதி (25%) ஏற்கனவே ஏஐ உணர்வுப்பூர்வமானதாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள்.
மக்களை ஏமாற்றும்
மேலும், பொதுமக்கள் பலரும் ஏஐ பாட்கள் மீது உணர்வுகளை வளர்த்து ஆரம்பித்துள்ளனர். சிலர் ஏஐ சொல்வதைக் கேட்டுப் பல வேலைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதைத்தான் சுலைமான் எச்சரிக்கிறார். அதாவது ஏஐ டூல்களை தங்கள் நண்பராகவும் காதலராகவும் கூட கருதத் தொடங்கியுள்ளனர். ஏஐக்கு உணர்வுகள் எல்லாம் எப்போதும் வராது.. ஆனால், தனக்கு உணர்வுகள் வந்துவிட்டதாக அது மனிதர்களை எளிதாக நம்ப வைக்கும் என்பதே அவரது கவலையாக இருக்கிறது.
கவனம் தேவை
ஏஐ டூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிய, மக்களைப் பாதுகாக்கப் பாதுகாப்பு வழிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதையும் சுலைமான் வலியுறுத்தினார். அவர் மேலும் பேசுகையில், "நாம் மனிதர்களுக்கு உதவும் வகையில் ஏஐ-ஐ உருவாக்க வேண்டும். அது டிஜிட்டல் மனிதரைப் போல இருக்கக்கூடாது.
இந்த அற்புதமான தொழில்நுட்பம் உலகை மாற்றும் என்றாலும் அது சரியாக வேலையைச் செய்வதை உறுதிப்படுத்தப் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக இருக்க வேண்டும். மனிதர்களுக்கு உதவும் அற்புதமான ஏஐ மாடல்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். அதேநேரம் இதில் நாம் வெற்றி பெற எதை உருவாக்கக்கூடாது என்பதைப் பற்றியும் நான் பேச வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications