உங்கள் பர்ஸை நேரடியாக பதம் பார்க்கும் AI.. நீங்க இதில் சிக்க 90% சான்ஸ் இருக்கு.. ஜாக்கிரதை
சென்னை: AI நமக்கே தெரியாமல் பல்வேறு வழிகளில் நமது வாழ்க்கையை மாற்றி அமைத்து வருகிறது. இதற்கிடையே ஏஐ மாடல்களில் நாம் அன்றாடம் வாங்கும் மளிகைப் பொருட்கள் விலை கூட உயர்வதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏன் இதுபோல நடக்கிறது.. இதில் இருந்து தப்பிக்க எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்
செயற்கை நுண்ணறிவு என்பது இப்போது வெறும் சாட்பாட்களாக மட்டும் நின்றுவிடவில்லை. ஏஐ இப்போது தான் வளர்ந்து வருகிறது என்றாலும் கூட அவை கல்வி, ஹெல்த்கேர் உட்படப் பல்வேறு துறைகளில் நுழைந்து வருகிறது. இது பல்வேறு வகைகளிலும் மக்களுக்கு உதவி வருகிறது. அதேநேரம் சில சிக்கல்களையும் கூட ஏற்படுத்துகிறது.

ஏஐ
அதில் ஒன்று தான் AI-powered pricing algorithms. அதாவது இப்போது பல்வேறு நிறுவனங்களும் ஏஐ டூல்களை கொண்டு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கிறது. ஒரே பொருளின் விலை வாடிக்கையாளர் நடத்தை, தேவை, இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறும். அதுவும் நொடிப் பொழுதில் மாறக்கூடியது. நிறுவனங்கள் இதை ஸ்மார்ட் பிரைசிங் என்று சொல்கிறார்கள். ஆனால், இது பொதுமக்களையே அதிகம் பாதிக்கும்.
டைனமிக் பிரைசிங் எனப்படும் சந்தைக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்யும் போக்கு என்பது முழுமையாகப் புதிய ஐடியா இல்லை. பல ஆண்டுகளாகவே விமான டிக்கெட்கள் இப்படித் தான் விற்கப்படுகிறது. நம்மில் பலருக்கும் இது தெரிந்திருக்கும். அதாவது விமான டிக்கெட்களை முன்கூட்டியே புக் செய்தால் குறைவான தொகைக்கு புக் செய்யலாம். அதேநேரம் கடைசி நேரத்தில் புக் செய்தால் அதிகத் தொகை செலுத்த வேண்டி இருக்கும்.
டைனமிக் பிரைசிங்
பெரும்பாலும் நம்மூரில் விமான டிக்கெட்களை கடைசி நேரத்தில் எடுப்பவர்கள் காப்பரேட் நிறுவனங்களாகவே இருக்கும். எனவே, அங்கிருந்தவரை இது பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்தது இல்லை. ஆனால், ஏஐ வந்த பிறகு இவை நாம் அன்றாடம் வாங்கும் மளிகைப் பொருட்கள், பால், காய்கறி உள்ளிட்டவற்றிலும் வர ஆரம்பித்துவிட்டது. பல இ-காமர்ஸ், உணவு டெலிவரி செயலிகள், ஹோட்டல் முன்பதிவு தளங்கள் கூட இதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.
ஒருவரின் கடந்த காலச் செயல்பாட்டை வைத்தே.. அவர் எவ்வளவு பணம் செலவிட வாய்ப்புள்ளது என்பதை வைத்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அல்காரிதம் அடிப்படையிலான இந்த விலை நிர்ணயத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய விளைவுகளில் ஒன்று “Personalised” Prices. அதாவது ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விலையைக் காட்டுவார்கள்.
15% வரை அதிகரிக்கும்
ஒருவர் எந்த ஏரியாவில் இருக்கிறார், அவர் எந்த வகையான செல்போன் யூஸ் செய்கிறார், அவரது கடந்த கால ஆர்டர் பேட்டர்ன் எப்படி இருந்துள்ளது என அனைத்தையும் கணக்கில் கொண்டு விலையை மாற்றி அமைப்பார்கள். எனவே, ஒரு பொருளின் விலை உங்களுக்கு அதிகமாகவும் பக்கத்து வீதியில் இருப்பவருக்குக் குறைவாகவும் கூட காட்டலாம். AI ஏற்படுத்தும் இந்த டிஜிட்டல் பாகுபாட்டைப் பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதனால் 15% வரை பொருட்களின் விலை உயர்வதாகச் சொல்லப்படுகிறது.
தப்பிக்க என்ன செய்யலாம்!
ஏஐ இப்போது தான் வளர்ந்து வருவதால் இது தொடர்பாகத் தெளிவான விதிகளும் இல்லை. ஆனால், இதில் இருந்து நீங்கள் ஓரளவுக்குத் தப்பிக்கலாம். அதற்குச் சில எளிமையான நடவடிக்கைகள் உள்ளன. முதலில் ஒரு விஷயத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டாம்.. 3, 4 தளங்களில் விலையை ஒப்பிட்டுப் பார்க்கவும். மேலும், ஷாப்பிங் செய்யும்போது குக்கீகளை நீக்குவது, விலைகளைச் சரிபார்க்கும்போது லாகின் செய்வதைத் தவிர்ப்பது ஆகிய ஓரளவுக்குக் கைகொடுக்கும்!












Click it and Unblock the Notifications