"ரோபோவுக்கு குவா.. குவா..!" எங்கேயோ போன சீனா.. மருத்துவ உலகில் இதுபோல ஒன்று நடந்ததே இல்லையாம்!
சியாட்டில்: ரோபோக்கள் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்றால் எந்தப் படக்கதை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இது சீக்கிரம் உண்மையாகப் போகிறது. சமீபத்தில் சீனாவின் பீஜிங்கில் நடந்த உலக ரோபோ மாநாட்டில், கைவா டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜாங் சிஃபெங், செயற்கை கருப்பை மூலம் செயல்படும் ஹியூமனாய்டு ரோபோ கர்ப்பத் திட்டம் குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தக் காலத்தில் ஏஐ புதிய புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ மற்றும் ரோபோக்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இதன் மூலம் உலகமே மெல்ல அடுத்த கட்டத்திற்குச் சென்று வருகிறது. இதற்கிடையே சீக்கிரமே குழந்தை பெறும் ரோபோக்கள் வரவுள்ளதாம். இந்த ரோபோவின் சிறப்பு என்ன.. எதற்காக இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கர்ப்பமாகும் ஏஐ
இதற்கிடையே ஏஐ ரோபோ இப்போது புதிய பாய்ச்சலுக்கு ரெடியாகிறது. அதாவது செயற்கை கருப்பபை மூலம் செயல்படும் ஹியூமனாய்டு ரோபோ கருத்தரிக்கும் முறை குறித்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் இதன் ப்ரோடோடைப் செயல்பாட்டிற்கு வருகிறது. கருத்தரிப்பு சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.
இது கருத்தரிப்பு சிகிச்சை முறையையே கூட மாற்றி அமைக்கும் எனச் சொல்லப்படுகிறது. ரோபோவின் செயற்கை கருப்பபை ஒரு உண்மையான கருப்பபை உடன் ஒத்திருக்கிறது.. இதில் செயற்கை அம்னோடிக் திரவம் மற்றும் கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கருவின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஊட்டச்சத்து விநியோக அமைப்பு ஆகியவையும் இருக்குமாம்.
ஏன் முக்கியம்
நியூயார்க் போஸ்ட் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இது நிச்சயம் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும். கருத்தரிக்க முடியாதவர்களுக்கு இது மிக பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. ஏஐ மற்றும் ரோபோக்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்க உதவுவது மட்டுமில்லாமல் மனிதர்களுக்கு உயிர் கொடுக்கவும் போகிறது. அந்த நிலைக்கு நாம் விரைவில் சென்றுவிடுவோம் என்பதையே இது காட்டுகிறது.
மனிதர்கள் செய்வது போலவே
இந்த ஹியூமனாய்டு ரோபோ கர்ப்ப அமைப்பில் செயற்கை கருப்பை தான் பிரதானமானது. இது மனிதக் கருப்பையின் செயல்பாடுகளைப் போலவே இயங்குகிறது. இந்த மேம்பட்ட அமைப்பு ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜன் சப்ளை செய்வது மட்டுமின்றி, மனித உடலில் இருப்பது போன்ற வெப்பத்தைப் பராமரிக்கிறது. இதன் மூலம் 10 மாதங்கள் முழுமையாகக் கரு வளர உகந்த சூழல் உருவாக்கப்படும்.
இது தொடர்பாக டாக்டர் ஜாங் சிஃபெங் கூறுகையில், "இந்தக் கருப்பை ரோபோவின் உடலில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும். கருத்தரிப்பு, சிசு வளரும் காலம் என எல்லாக் காலங்களிலும் சிசுவின் வளர்ச்சி கூர்ந்து கவனிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் மருத்துவ ஆராய்ச்சியில் புதிய எல்லைகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கர்ப்பச் சிக்கல்கள், மரபணுக் கோளாறுகள் என எல்லாச் சிக்கல்களையும் இதன் மூலம் நீக்க முடியும்" என்றார். இயற்கையாக கருவுறும்போது கூட இந்தளவுக்குத் துல்லியமாகக் கண்காணிக்க முடியாது என்கிறார்.
எப்போது செயல்பாட்டிற்கு வரும்?
சுமார் 100,000 யுவான் (சுமார் 12 லட் ரூபாய்) விலையில் இந்த ரோபோ விற்பனைக்கு வருமாம். செயற்கை கருத்தரித்தல் செலவுகளுடன் ஒப்பிடுகையில் இத ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். அதேநேரம் இந்த ரோபோ முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரக் கூடுதல் காலம் ஆகும். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இதற்கான கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் அடுத்தாண்டு இதன் மாடல் வரும் நிலையில், அது உலகெங்கும் நிச்சயம் பேசுபொருள் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications