ஆவணி மாத ராசி பலன் 2021 - சூரிய பெயர்ச்சியால் மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதம் நிகழும்
ஆவணி மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் திடீர் யோகங்கள் கை கூடி வருமா என்று பார்க்கலாம்.
சென்னை: ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியனுடன் செவ்வாய் புதன் பயணம் செய்கின்றனர். ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகரத்தில் சனி வக்ரம், கும்ப ராசியில் குரு வக்ரம் என கிரகங்களின் சஞ்சாரம் எல்லாம் உள்ளது. நவ கிரகங்களின் சஞ்சாரம், இடப்பெயர்ச்சி மற்றும் கிரகங்களின் கூட்டணி பார்வையால் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் ஆவணி 10ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். ஆவணி 20ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஆவணி 29ஆம் தேதி குரு மகர ராசிக்கு திரும்புகிறார். மாத பிற்பகுதியில்
ஆட்சி பெற்ற சூரியன், உச்சம் பெற்ற புதன், ஆட்சி பெற்ற சுக்கிரன் ஆட்சி பெற்ற சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
இந்த மாதத்தில் ஓணம் பண்டிகை, ஆவணி அவிட்டம், ஸ்ரீ சனி ஜெயந்தி, கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி,கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. பண்டிகைகள் நிறைந்த இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் அற்புதமும்
நிகழப்போகின்றன. என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் இந்த மாதம் வலுவடைந்துள்ளது. இரண்டாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சூரியன் உடன் செவ்வாய் புதன் இணைந்து பயணம் செய்கின்றனர். ஆறாம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் கேது பத்தாம் வீட்டில் சனி வக்ரமாகவும், லாப வீட்டில் குரு வக்ரமடைந்தும் சஞ்சரிக்கின்றனர். மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் பகவான் ஐந்தாம் வீட்டில் சூரியனுடன் பயணம் செய்வதால் சிறப்பாக இருக்கும். குருவின் பார்வையும் கிடைப்பதால் நினைத்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர்பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். புத ஆதித்ய யோகம் நிறைந்துள்ளதால் மாணவர்களுக்கு கல்வியில் சிறப்படையும், தகவல் தொடர்புத்துறை சிறப்படையும். வேலையில் புரமோசனும் அதிகாரம் மிக்க பதவி கிடைக்கும். இந்த மாதம் 10 ஆம் தேதி புதன் ஆறாம் வீடான கன்னி ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இதனால் தொழில் வியாபாரத்தில் லாபமும் வெற்றியும் கிடைக்கும்.
குரு லாப வீட்டில் பயணம் செய்வதால் மூத்த உடன்பிறப்புகளில் உதவி கிடைக்கும். ஐந்துக்குரியவன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் பிள்ளைகளால் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். குருவின் பார்வை சூரியனுக்கும் செவ்வாய்க்கும் கிடைப்பதால் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நல்ல காரியம் நடைபெறும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். அதிசாரமாக சென்ற குருபகவான் இந்த மாத இறுதியில் மீண்டும் பத்தாம் வீட்டிற்கு வந்து நீச்சம் பெற்று பயணம் செய்கிறார்.
ராசி நாதன் செவ்வாய் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஆறாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்ற புதனோடு செவ்வாய் இணைந்து பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் சவால்களை சமாளிப்பீர்கள். திறமையை நிரூபக்கப் போகிறீர்கள். முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். குருவின் பார்வையால் பண வரவு அதிகரிக்கும். பரிசு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். சொந்த வீட்டிற்கு செல்வதற்கான நேரம் அதிகரிக்கும். சுப செய்திகள் தேடி வரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும்.
வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உயர்பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடி வரும். புத்திர பாக்கியம் கை கூடி வரும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வந்து ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்ப வாழ்க்கையில் குதூகலம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. வெற்றிகள் கை கூடி வரும் காலம் வந்து விட்டது. ஆவணி மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

ரிஷபம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசியில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய், புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரங்கள் பயணம் செய்கின்றன. நான்காம் வீடும் ஐந்தாம் வீடும் வலுவடைந்துள்ளன. செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். அவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. நல்ல செயல்கள் அதிகம் நடைபெறும். வருமானம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும்.
புத்திர பாக்கியம் தேடி வரும் பயம் நீங்கி தெளிவு பிறக்கும். வசுமதி யோகம் தேடி வரப்போகிறது. எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். குரு பாக்ய ஸ்தானத்திற்கு வருவதால் கவுரவம் அதிகரிக்கும் மதிப்பு மரியாதை கூடும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் காலம் கை கூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு நல்ல மாதம் உயர்கல்விக்கான யோகம் கை கூடி வரும். புத்தியில் தெளிவு பிறக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் நன்மைகள் நடைபெறும்.
உங்களுடைய ராசிக்கு களத்திர ஸ்தான அதிபதி செவ்வாயும், ஐந்துக்கு உடைய புதனும் இணைந்து ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வது ராஜயோகம். நினைத்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும். திருமணம் சுப காரியம் கை கூடும். சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஐந்துக்கு உடையவன் ஐந்தில் உச்சம் பெற்றிருப்பதால் புத்திர பாக்கியம் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும்.
மாத பிற்பகுதியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சில யோகங்கள் கை கூடி வரப்போகிறது. ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரன் பயணம் செய்யப்போவதால் விபரீத ராஜயோகம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வரவு வரும். குருவின் பார்வையும் மாத இறுதியில் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. கோபத்தை குறைத்துக்கொள்ளவும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்த மாதமாகும்.












Click it and Unblock the Notifications