அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம்
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை , பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது.
"சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" என திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.
விநாயகரும் சந்திரனும்:
ஒருமுறை முழுமுதற்கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் சந்திக்கச் சென்றார். சந்திரன் தான் ஒரு முழுவெண்மதி என்பதால், யானையின் முகத்தை ஒத்த விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் 'உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்' என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. முழு வெண்மதியாக இருந்த சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், ஈசனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். சந்திரனின் நிலையை உலகிற்கு உணர்த்தவே மாதத்தின் பாதிநாள் தேய்பிறையாகவும், அடுத்த பாதிநாள் வளர்பிறையாகவும் வலம் வருகின்றான் என்பது நியதி. முழுமதி நாளில் சந்திரனை வழிபட்டால் 'சந்திர தரிசனம்' என்பார்கள்.
சந்திரனின் அகந்தை:
"தான் பெரியவன்" என்று அகந்தையோடு
நினைப்பது தவறு. அது மிகப்பெரிய அழிவை உணர்த்தும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக சந்திரன் காணப்படுகின்றான். இதனால் தான் வளர்பிறையில் எந்த காரியம் தொடங்கினாலும் அந்த காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம்.
சந்திர தரிசனம்:
சந்திரன் அமாவாசையை அடுத்து வரும்
நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திர தரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம்.
வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ(கோமா) வராது.
இந்த மூனறாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.
ஜோதிடத்தில் சந்திர தரிசனம்:
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.
சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். .
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
சந்திர தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள்:
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.
அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:
அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது. இஸ்லாம் மதத்திலிருந்து, கிறித்தவம், ஜைனம்,இந்து மதம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது.
மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும், தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.












Click it and Unblock the Notifications