கொரோனா வைரஸ் பாதிப்பு நீக்கும் கோளறு பதிகம் - நவகிரக தோஷங்கள் நீங்கும்
திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாதிகம் பாடினால் கொள்ளை நோய்களில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும் நவ கிரக தோஷம் நீங்கும், கொரோனா வைரஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம
சென்னை: சிவனடியார்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பான நால்வர்களில் திருஞானசம்பந்தர் அருளியது கோளறு பதிகம். நவ கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்க கோளறு பதிகத்தை பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். ஒருவர் நோயுடன் போராடும் போது சிவபெருமானை வணங்கி கோளறுபதிகம் பாடினால் நோய் பாதிப்பு நீங்கும் என்பது சிவனடியார்கள் நம்பிக்கை. பல நேரங்களில் கோளறு பதிகம் பாடியவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் கோளறு பதிகம் பாடினால் மக்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவக்கிரகங்கள் மூலம் ஏற்படும் துன்பங்களை நீக்கிடவும், பிளேக், காலரா, மலேரியா போன்ற தொற்று வியாதிகள் ஓடிச் சென்றிடவும், இந்திய-சீன யுத்தம் 1962ஆம் ஆண்டில் நடந்தபோதும், புயல் மழை தொடர்ந்து பெய்து வெள்ளக்காடாக மாறிய போதும், திருஞான சம்பந்த பெருமான் பாடிய கோளறு திருப்பதிகத்தைப் பாடி மக்கள் நலம் பெற்று வாழ்ந்த வரலாற்று செய்திகள் உண்டு.

இப்படிப்பட்ட பெருமையும், அருமையும் வாய்ந்த திருஞானசம்பந்தப் பெருமானின் கோளறு திருப்பதிகத்தை அனைவரும் மனம் உருகப் பாடி, சிவபெருமான்-பார்வதி தேவயின் பேரருளால் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்போம். நாம் நாட்டு மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
கோளறு பதிகம் எப்போது பாடப்பட்டது என்ற கேள்விகள் எழலாம். திருவாதவூரில் வசித்தவர் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசருடன் சேர்ந்து பல சிவ தலங்களுக்கு பயணித்துள்ளார். ஒருமுறை திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தில் சிவ தரிசனத்தில் இருந்த போது, மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மனைவி மங்கையர்கரசியிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனை ஏற்று மதுரைக்குப் புறப்பட தயாரானார் திருஞானசம்பந்தர். அப்போது திருநாவுக்கரசர், இன்றைய தினம் நல்ல நாள் இல்லை, அதனால் இன்று பயணிக்க வேண்டாம் என்று கூறி தடுத்தார்.

இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார். பதிகம் என்றால் பத்து பாடல்கள் அடங்கிய தொகுதி. இந்த பதிகத்தினால் ஏற்படும் பயனையும் கூறினார் திருஞானசம்பந்தர். கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது அன்றைய தினம் நல்ல காரியங்களை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.
கோளற்று திருப்பதிகம் பாடல்கள் - விளக்கம்
பாடல் - 1
வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் :
மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையை மீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.
பாடல் - 2
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் :
என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின் கண் இலங்கப் பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தை மலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.
பாடல் - 3
உருவளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் :
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.
பாடல் - 4
மதி நுதல் மங்கையோடு வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் :
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின் கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யம தூதர், கொடிய நோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.
பாடல் - 5
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் விளக்கம் :
நஞ்சணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான், இருள் செறிந்த வன்னி இலை, கொன்றை மாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.
பாடல் - 06
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்:
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்தி வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு, புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும்.! அடியார்கட்கும் மிக நல்லனவே செய்யும்.
பாடல் - 7
செப்பு இளமுலை நன்மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவார்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்
செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறி வரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத்தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.
பாடல் - 8
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் :
மன்மதன் அழியுமாறு நெற்றி கண் திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா, ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும்.
பாடல் - 9
பல பல வேடமாகும் பரன் நாரிபாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் :
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறி வரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்க மலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரை மலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.
பாடல் 10
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள் புரிந்த வேட வடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.
பாடல் 11
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
பொருள்
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன் முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications