மதுரை மீனாட்சிக்கு சொக்கருடன் திருக்கல்யாணம்... நேரில் தரிசிக்க முன்பதிவு அவசியம் பக்தர்களே
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழா வரும் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
மதுரையின் மிக முக்கிய திருவிழா சித்திரை திருவிழாதான். கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரைக்குமே களைகட்டும். அழகர் மலையில் இருந்து வைகையில் இறங்கி வரும் கள்ளழகரை வரவேற்க எதிர்சேவை தொடங்கி அவர் வைகையில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் கொடுத்து விட்டு திரும்பும் வரைக்குமே பக்தர்கள் கூட்டம் மதுரையில் அலைமோதும்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி சித்திரை திருவிழா நடைபெற்றது. அழகரைக் காணாத வைகையும் ஆற்றாமையை வெளிப்படுத்தியது. கோவிலிலேயே தொட்டியில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தார் கள்ளழகர்.

ஆன்லைன் தரிசனம்
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திருத்தேர், கள்ளழகர் எதிர் சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் இணையத்தில் மக்கள் காணும்படி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. டிவியில் சாமியைப் பார்த்து தரிசனம் செய்தனர் பக்தர்கள். வீட்டிலேயே பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றது. மதுரை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் திருவிழாவைக் காண ஏராளமானோர் மதுரைக்கு வருவார்கள்.

மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண அனுமதி
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தை காண ஏப்.4 முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகள் விற்பனை
திருக்கல்யாண உற்சவ விழாவில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் வசதிக்காக ரூ.200, ரூ.500 க்கு கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications