Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஷ்டத்துக்கு மேல் கஷ்டமா? காலாஷ்டமியில் கால பைரவரை வணங்குங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதன் கிழமை பகல் 11.16 மணி முதல் 7.6.2018 வியாழக்கிழமை பகல் 12.37 வரை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது. இதனை காலஷ்டமி என பஞ்சாங்கங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது என்றாலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு விஷேஷம் தான்.

இந்த நேரத்தில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு சாஸ்திரங்கள் கூறுகிறது. சென்னை கபாலிஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைகாவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி போன்ற ஸ்தலங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அஷ்டமியும் பைரவ வழிபாடும்:

அஷ்டமியும் பைரவ வழிபாடும்:

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாக போற்றப்படுகின்றது. அஷ்டமி திதிதியில்தான் பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது.

ஜோதிடத்தில் காலபைரவர்:

ஜோதிடத்தில் காலபைரவர்:

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவனின் ருத்ர ரூபமான கால பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர் என்பது இதனால் புலனாகிறது.

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும். கால பைரவ மூர்த்தி காலனை வென்றவர். மேலும் ஜோதிடத்தில் ஆயுள் காரகர் எனும் சனைஸ்வர பகவானுக்கே குருவானதால் பைரவரை வணங்குவோர்க்கு எம பயம் இருக்காது. மேலும் காலபைரவர் நாகபரணம் பூண்டு விளங்குவதால் அவரை வணங்குவோர்களுக்கு விஷ ஜெந்துக்கள் மற்றும் நோய்களால் உபாதைகள் ஏற்படாது.

காலபுருஷ தத்துவம்:

காலபுருஷ தத்துவம்:

ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புன்னியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்க போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பை பற்றி சொல்வது , இதன்படி மேஷம் முதல் வீடாகவும் , மீனம் 12 ம் வீடாகவும் அமையும் , சுய ஜாதக அமைப்பிற்கு பலன் காணும்பொழுது , இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்பு படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்.

 காலபுருஷனும் கால பைரவரும்:

காலபுருஷனும் கால பைரவரும்:

சிவ ஸ்வருபமான கால பைரவரை "மஹா கால' என்றும், ‘காலாக்னீ ருத்ராய' என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். அவரது அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன் உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும் காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்க்கு கட்டுபடாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம் போற்றுகிறது.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

கால புருஷ சக்கரம்:

கால புருஷ சக்கரம்:

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களை கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் . இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷத்திரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும். புதனின் மற்றோரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும்.

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாக பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கினயறார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

ஜோதிட ரீதியாக பைரவரை யாரெல்லாம் உபாசனை செய்வார்கள்?

1. செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளை லக்னம் மற்றூம் ராசிகளாக கொண்டவர்கள்.

2. லக்னத்திலோ ராசியிலோ செவ்வாயை கொண்டவர்கள் மற்றும் திரிகோணங்களில் செவ்வாய் நிற்க பெற்றவர்கள்.

3. லக்னம் அல்லது ராசி செவ்வாயின் நக்‌ஷதிரங்களான மிருஹசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நக்‌ஷத்திரங்கள் அமைய பெற்றவர்கள்.

4. செவ்வாயை ஆத்ம காரகனாக கொண்டவர்கள்.

5. செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றவர்கள்.

6. ஜாதகத்தில் சனி செவ்வாய் மற்றூம் ராகு எந்த விததிலும் சேர்க்கை பெற்றவர்கள்.

இன்று அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ காலத்தை (நேரத்தை) பலவிதங்களிலும் வீணடிக்கின்றார்கள். அதனால் அனைவருக்கும் தோஷம் ஏற்படுகின்றது. காலத்தால் ஏற்படும் தோஷம் தீர கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+