புத்தாண்டு பலன் 2025: கும்ப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. கிடைக்க போகும் நற்பலன்கள் என்ன தெரியுமா?
புத்தாண்டு 2025: 2019 ஆம் ஆண்டு முதல் கடும் அவஸ்தைகளைப்பட்டு வந்த கும்ப ராசிக்காரர்கள் வரும் புத்தாண்டில் என்ன விதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for kumbam)
கும்ப ராசிக்காரர்களே உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாரிக் கொடுப்பீர்கள். பிடிக்காதவர்களுக்கு ஒரு பிடி கூட எதுவும் கொடுக்க மாட்டீர்கள். உங்கள் மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உங்கள் உள் மனதுடன் பேசிக் கொள்பவர்கள் நீங்கள். ஒரு குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அதில் கும்ப ராசியினர் மட்டும் கோபுரமாக, குத்துவிளக்கு போல் தெரிவார்கள். அழகு, ஆற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். 2019 இல் இருந்து நான் படுகிற அவஸ்தை எனக்குதான் தெரியும் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். 99 சதவீதம் எல்லா வேலையும் முடிந்து கடைசி ஒரு சதவீதத்தில் எல்லா பணிகளும் வந்து நின்று கொண்டிருந்திருக்கும். ஆனால், இந்த புத்தாண்டு முதல் நீங்கள் நினைத்து காரியங்கள் எல்லாம் விரைவில் முடிப்பீர்கள். சொன்ன சொல்லை முடித்துக் காட்டுவீர்கள். வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நிறைவேற்றுவீர்கள்.
ராசிக்குள் சனி பகவான் உட்கார்ந்திருக்கும் நிலையில், ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு 2025 பிறக்கிறது. சாப்பிடுவதற்கு விருப்பம் இல்லை, தூக்கமும் சரியில்லை என்ற நிலை இருக்கும். மார்ச் 29 ஆம் தேதி முதல் இந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். அன்று முதல் சனி பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி இரண்டாம் வீட்டுக்குச் செல்வதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சோர்வு, களைப்பு நீங்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். குரு பகவான் கடந்த இரண்டு வருடமாக உங்களை புரட்டி எடுத்துக் கொண்டிருந்திருப்பார். வீட்டுக்குள் நுழையும்போதே இன்றைக்கு என்ன விதமான பிரச்னை காத்திருக்கிறதோ என்ற எண்ணத்தில் தான் நுழைந்து கொண்டிருந்திருப்பீர்கள். அந்த அளவுக்கு பிரச்னை சந்தித்து வந்திருப்பீர்கள்.
நீங்கள் ஒன்று சொன்னால் வீட்டில் இருப்பவர்கள் வேறு ஏதாவது புரிந்து கொள்வார்கள். அவர்கள் ஏதாவது சொன்னால் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்வீர்கள். இந்த நிலைமை உங்களுக்கு மாறும். மே 14 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு பகவான் வந்து உட்கார்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடப் போகிறார். அதனால் மே 14 ஆம் தேதி முதல் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும், மகிழ்ச்சி பெருகும்.
பண வரவு திருப்திகரமாக இருக்கும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரம் மே மாதம் முதல் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மே மாதம் 18 ஆம் தேதி முதல் ராசிக்குள் ராகு வந்து அமருவதால் அலர்ஜி, தொற்று போன்றவை உண்டாகும். மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.
2025 ஆம் ஆண்டு முழுவதுமே நன்றாக இருக்க, ஜெயிக்க தெய்வ வழிபாடு அனுகூலத்தை தரும். வேர்க்கடலை தானம் தரலாம். கூலி தொழிலாளர்களுக்கு, மூட்டை சுமப்பவர்களுக்கு தானம் அளிப்பது நல்ல பலனைத் தரும்.












Click it and Unblock the Notifications