காதல்.. கேட்டதுமே கரண்ட் பாஸ் ஆகுதா பாஸ்.. உங்கள் காதலை ஜெயிக்க வைக்கும் கிரகங்கள்!
காதல் என்ற வார்த்தையை கேட்டாலே சும்மா கரண்ட் பாஸ் ஆவது போல ஜிவ் என்று இருக்கும். அந்த காதலை தூண்டுவதும், நமக்கு பிரியமான ஒருவரை பார்த்த உடன் காதல் மணி அடிக்க வைப்பதும் ஜாதக கட்டங்களில் உள்ள கிரகங்கள்த
சென்னை: காதல் என்ற உணர்வு அனைவருக்குமே சந்தோஷத்தை கொடுக்கும். இள வயதில் காதலால் பாதிக்கப்படுவதும் வயதான பின்னர் சுகரால் பாதிக்கப்படுவதும் வருவது சகஜமான விசயம்தான். இன்றைக்கு ஹாட் டாபிக்கே கல்யாண வீடு கோபி சூர்யா லவ் சக்சஸ் ஆனதுதான். ஒருவர் காதலில் விழுவதற்கும் அந்த காதல் ஜெயிப்பதற்கும் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம்.
உயிர்கள் அனைத்திற்கும் காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. எனவேதான் திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன. சுக்கிரன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய நால்வருமே காதலிக்க கற்றுத்தருவதில் முக்கியமானவர்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.

காதல் கிரகங்கள்
காதலுக்கு உதவி செய்ய ஐந்து கிரகங்கள் இருந்தாலும் காதல் டிபார்மெண்ட் தலைவர் சுக்கிரன்தான். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். சுக்கிரன்தான் யார் மீது காதல் அம்பை தொடுக்கலாம் என்று தயாராக இருப்பார்.

காதல் வீடுகள்
ஜாதகத்தில் இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம், 5 ஆம் பாவம் காதலை ஏற்படுத்தும், 7ஆம் பாவகமான களத்திர ஸ்தானம் திருமணம் நடைபெறும் பதினொன்றாம் இடம் ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேற்றும் இடம். இந்த பாவகங்கள் தொடர்பு கொள்ளும் போது ஒரு ஜாதகருக்கு காதல் திருமணம் அமையும். ஐந்தாம் பாவகம் மனத்தைக் குறிக்கும் பாவம், ஐந்தாம் வீட்டில் நிற்கும் தீய கிரகங்கள் கூட, காதலை ஏற்படுத்தும். ஐந்தாம் வீட்டில் நிற்கும் சுபக் கிரகங்கள், நல்ல பொருத்தமான துணையை தேடி தரும். இந்த 5ஆம் பாவதிபதி இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமரும்போது காதலித்த பெண்ணையே குடும்பத்துக்குள் சேர்க்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.

சுக்கிரன் செவ்வாய்
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம், துலாம், மீனம் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் பார்வையால் காதலை பற்றிக்கொள்ள வைப்பார். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்தும் சுக்கிரன் ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். செவ்வாய்தான் தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். ஒருவரின் ஜாதகத்தில் இவர்கள் இணைந்திருந்தால் காதல் பற்றிக்கொள்ளும்.

காதலில் விழும் காலம்
சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாம் ராசிகளில் அமர்ந்த ராகு, கேதுக்களின் தசையோ, புக்தியோ அல்லது சுக்கிரன் மற்றும் ஆறு, எட்டாம் அதிபதிகளோடு சம்பந்தப்பட்ட நிழல் கிரகங்களின் தசா,புக்திகள் நடைபெறுமாயின் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற அமைப்பில் சர்ப்பக் கிரகங்கள் ஒரு பெண்ணை காதலில் விழ வைக்கும். இதே போல ஆறு மற்றும் எட்டில் இருக்கும் ராகு, கேதுக்களின் தசை, புக்தி அல்லது அஷ்டமாதிபதியின் தொடர்பை பெற்ற ராகு, கேதுக்களின் தசை, புக்திகளில் கண்டிப்பாக ஒரு இளம்பெண் காதல் என்ற பெயரில் ஏமாறுவார். அப்போது பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

காதல் வெற்றிக்கு காரணம்
பருவ வயதில் வரும் ராகு தசையும், சுக்கிர தசையும் இயற்கையிலேயே காதல் எண்ணங்களைத் தோற்றுவிக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் இயற்கையிலேயே காதல் வரும். அதேநேரத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் மட்டுமே காதல் ஜெயித்துவிடாது. மன உறுதியை குறிக்கும் சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும் காதலர்கள் கைபிடிக்க மனஉறுதி வேண்டும். பிரச்னை வந்தால் எதிர்கொள்ள செவ்வாயும் பலமாக இருக்க வேண்டும்.

மனம் மாறும் காதலர்கள்
சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவர். காதலர்களை கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சந்திரன் உடன் சுப கிரகங்களின் சேர்க்கை, பார்வை இருந்தால் அந்த காதல் வெற்றியடையும். பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அந்த காதலர்கள் பிரிந்து விடுவார்களாம். காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அதற்கு அடித்தளம் போடுபவர் சனிபகவான். சனியோடு சந்திரன் சேர்க்கை பெற்றாலோ, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.

தைரிய நாயகன் செவ்வாய்
காதலுக்கு வேகமும் துணிச்சலும் ரொம்பவே முக்கியம். வீரத்தின் நாயகன் ரத்தக் காரகன் செவ்வாய் கிரகம். விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்கும். ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தில் தைரிய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானம் படுக்கையை குறிக்கும் 12ஆம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது.

எந்த வீட்டில் எந்த கிரகம்
ஜாதகத்தில் லக்கினம் அல்லது ராசிக்கு ஒன்றாம் இடம், ஐந்தாம் இடம், ஏழாம் இடம், ஒன்பதாம் இடம் அதிபதிகள் தொடர்பு பெறவேண்டும். இது கூட்டணியாகவோ, பார்வையாகவே, பரிவர்த்தனையாகவோ, சார பரிவர்த்தனையாகவோ இருக்கலாம். லக்கினம் பூர்வ புண்ணிய ஸ்தானம் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் களத்திர ஸ்தானம் அதிபதிகள் கூட்டணி சேர்வது காதலுக்கு காரணமாகும் அதே போல ஜாதகத்தில் லக்கினத்தோடு களத்திர ஸ்தானம் தொடர்பு பெறுவது, அல்லது லக்கினம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் தொடர்பு பெறுவது காதல் திருமணம் ஏற்பட காரணமாகும்.

எந்த திசையில் காதல் வரும்
களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் அதிபதியோடு சுக்கிரன், செவ்வாய், சனி கூட்டணி அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ அந்த தசாபுத்தி அந்தாரத்தில் காதல் மலரும். களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீட்டில் ராகு செவ்வாய் கூட்டணி அல்லது ராகு உடன் சுக்கிரன் இணைந்திருப்பது அந்த கூட்டணியை குரு பார்த்தால் அந்த திசை நடக்கும் போது காதல் மலர்ந்து திருமணத்தில் கை கூடும்.

பெற்றோரை எதிர்த்து திருமணம்
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் , களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும். காதலிக்கும் யோகம் இருந்து ராகு, கேதுக்களின் சம்மந்தம் ராசியிலோ அம்சத்திலோ இருக்குமானால், வாழ்க்கைத்துணை அந்நிய மதத்தினராகவோ அல்லது அயல் நாட்டை சேர்ந்தவராகவோ இருப்பார். ராகு முஸ்லீம் மதத்தையும், கேது கிருத்துவ மதத்தையும் குறிப்பவர். இவர்கள் 5, 7ம் அதிபதிகளோடு இணைந்திருப்பது, சுக்கிரனோடு கூட்டணி போன்ற கிரக நிலைகள் வேற்று மதத்தினரை காதலிக்கத் தூண்டுவதோடு பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்ள வைக்கும்.

கோபி சூர்யா காதல்
கல்யாண வீடு கோபிக்கும் சூர்யாவிற்கு காதல் மலர்ந்தாலும் சொல்லாமே பல தடைகள் ஏற்பட்டு அது இப்போதுதான் கை கூடி வந்துள்ளது. இந்த காதல் இனி வெற்றிகரமாக கல்யாணத்தில் முடியவேண்டும். அதற்கு அவங்க ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக இருக்கா என்று பார்க்க வேண்டியது அந்த டைரக்டரோட பொறுப்பு என்ன நான் சொல்றது. உங்க ஜாதகத்திலோ அல்லது உங்க மகன், மகளோட ஜாதகத்தில இந்த அம்சம் எல்லாம் இருக்கா? நடக்கிற தசாபுத்தி எப்படி இருக்குன்னு பாருங்க நீங்களே முடிவு பண்ணுங்க.












Click it and Unblock the Notifications