Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்..விடிய விடிய எதிர்சேவை..நாளை வைகையில் இறங்குகிறார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்ரா பவுர்ணமி நாளில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையிலிருந்து கள்ளழகர் நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். அதிகாலையில் மதுரைக்குள் வந்த அழகரை மூன்று மாவடி அருகே சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்சேவை செய்தனர். கோவிந்தா...கோவிந்தா என முழக்கமிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

ஒரு பக்கம் இடி சத்தம் மற்றொரு பக்கம் விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் சத்தம் என இரண்டு சத்தங்களும் மதுரை மக்களுக்கு கள்ளழகரின் வருகையை உணர்த்தியது. அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

Madurai Chithirai thiruvizha 2023: Lord Kallazhagar comes from Alagarkoil Madurai people Ethir Sevai

மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோஷமிட கள்ளழகர் புறப்பாடு நடந்தது. கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் உத்தரவு பெற்றார். இந்த நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவிற்கு அழகர் மதுரைக்கு புறப்படும்போதும் மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும். கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேசுவரருக்கும் திருமணம் நடக்கப் போகும் செய்தியைக் கேள்விப்பட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப் பார்க்க 24 கிமீ தூரத்திலுள்ள தன் இருப்பிடத்தை விட்டுச் சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார்.

அதுவும் எப்படி அலங்கரித்துக்கொண்டு வருகிறார் தெரியுமா? கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர்.

அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்ட போது அதிர்வேட்டு விண்ணை பிளந்தது. மலையில் இருந்து வரும் அழகரை வரவேற்க மழையையும் பொருட்படுத்தாமல் மதுரை நகர பக்தர்கள் உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர். வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் தங்கி இளைப்பாறி ஆசி வழங்குகிறார்.

தங்கப் பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் வரும் அழகரை பார்ப்பதற்கும் அவரை எதிர் கொண்டு அழைப்பதற்கும் மதுரை மக்கள் திரண்டு வரும் காட்சி கண் கொள்ளாகாட்சியாகும். மூன்றுமாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை வரவேற்றனர்.

எதிர் சேவையின் போது பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் கூத்துக்கள் கொட்டு மேளங்கள் என களைகட்டியது. கள்ளழகரின் மேல் அன்பு கொண்ட பக்தர்கள் தாங்களும் கள்ளழகர் போல வேடமிட்டும், கருப்பண்ணசாமியாக வேடமிட்டு அழகரை வரவேற்று ஆடி பாடினர்.

மதுரை மக்களின் வரவேற்பை மனங்குளிர ஏற்றுக்கொண்டு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இன்று இரவு வரை தங்கி ஆசி வழங்குகிறார். சித்திரை தேரோட்டம் காண வரும் பக்தர்ககள் அப்படியே தல்லாக்குளம் வந்து அழகரை பார்த்து விட்டு செல்வார்கள்.

இன்று நள்ளிரவில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் நடைபெறும்.

Madurai Chithirai thiruvizha 2023: Lord Kallazhagar comes from Alagarkoil Madurai people Ethir Sevai

அழகரின் அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார்.

தலைமை பட்டரின் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.

சிவப்புப் பட்டு கட்டி வந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் அதிகம் நடக்கும் என்பது ஐதீகம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பக்தர்களின் விரத வலிமைக்கு ஏற்ப அவரவர் தோல்பையில் இருந்து தண்ணீர் வெளியேறி சுவாமி மீது பட்டு அபிஷேகமாகும் என்பது ஐதீகம். சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் பீய்ச்சாமல் வழக்கமான தோல்பையில் சிறிய குழாய் மூலம், எவ்வித வேதிப் பொருள்களும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே பீய்ச்ச வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் காலையில் சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதைக்காண லட்சக்கணக்கான மக்கள் வைகைக் கரையிலும் ஆற்றினுள்ளும் திரண்டிருப்பார்கள். தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விப்பார்கள்...பிரம்மாண்ட விசிறிகள் வீசி உற்சாகமடைவார்கள் மதுரை மக்கள்.

வண்டியூர் சென்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து விட்டு மீண்டும் வந்த வழியே அழகர் கோவிலுக்கு பூப்பல்லக்கில் திரும்புவார் கள்ளழகர். அழகரின் வருகையை முன்னிட்டு மதுரையிர் 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 5ம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடக்க உள்ளது.

மதுரையில் கள்ளழகர் தங்கியிருக்கும் ஒருவாரமும் வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாடல் எட்டுத்திக்கும் ஒலிக்கும். நீங்களும் மதுரைக்கு வந்து கள்ளழகரை கண் குளிர தரிசனம் செய்து விட்டு செல்லுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+