புத்தாண்டு 2025: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்?.. என்ன பரிகாரம் செய்யலாம்?
புத்தாண்டு பலன் 2025: 2025 இல் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. பல்வேறு ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். அதே நேரத்தில், பல ராசிகளுக்கு பிரச்னைகளும் காத்துக் கொண்டிருக்கின்றன. எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது. எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
2025 புத்தாண்டு பிறக்க 17 நாட்களே உள்ளன. புத்தாண்டு நற்பலன்களைத் தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் பலருடைய ஆசையாகவும் இருக்கும். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது பெயர்ச்சிகள் என அடுத்தடுத்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக பாதிக்கப்படக்கூடிய ராசிகள் எவை, எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.

மீனம் (Puthandu rasi palan meenam): மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கப் போகிறது. இதனால், கடுமையான பாதிப்புகளை மீன ராசிக்காரர்கள் சந்திக்கவுள்ளனர். அன்பு நிறைந்த மனம் உடையவர்களாகவும், ஆற்றலும் கொண்டவர்களாக விளங்கும் மீன ராசியில் சனி அமர்கிறார். ராகுவும் ராசியில் சேர்வதால் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற மன அழுத்தங்கள் ஏற்படும்.
எவ்வளவு தான் உழைத்தாலும் வேலை செய்யும் இடங்களில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு, டிரான்ஸ்ஃபர் போன்றவை கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது. கணவன், மனைவிக்கிடையே பிரச்னைகள் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் இருக்காது. எடுத்த காரியங்களில் எல்லாம் ஏதாவதொரு தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். திருமண வாழ்க்கையில் கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம் (Puthandu rasi palan Simmam): சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கவுள்ளதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உங்களுடைய ராசிக்கு அதிபதியான சூரிய பகவானும், சனி பகவானும் ஏற்கனவே பகை கிரகங்கள். எட்டாம் இடத்தில் சனி அமருவதால் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். சனியினால் வேண்டாத கோபங்கள் ஏற்படும். மனக் கிளர்ச்சியுடனும், உணர்ச்சிவசத்துடனும் காணப்படுவீர்கள்.
உங்களுடைய கோபம் உங்களை மட்டுமல்லாமல், சுற்றியுள்ளவர்களுக்கும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அஷ்டமசனி என்பதால் வேண்டாத சிந்தனைகள் உருவாகும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபடத் தொடங்குவீர்கள். தூக்கம் இல்லாமல் போகும். உணவு சரியாக சாப்பிட முடியாமல் போகும். உடல் நலனில் கவனம் செலுத்த முடியாமல் போகும். பணிச்சுமை மற்றும் கவலைகள் அதிகரிக்கும். பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடி வரும்.
மேஷம் (Puthandu rasi palan mesham): மேஷ ராசிக்காரர்களுக்கு விரயச் சனி தொடங்கவுள்ளது. பண வரவு சூப்பராக இருந்தாலும் அது செலவாகிக் கொண்டே தான் இருக்கும். செய்யும் செலவுகளை சுப விரயமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. விரய சனி காரணமாக செய்யும் வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். வேலையில் கவனம் சிதறும். எது குறித்தும் முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். வேலை தொடர்பாக சிந்திப்பதில் தடைகள் ஏற்படும்.
தூக்கம் குறைவதால் கோபத்துடனும், எரிச்சலுடனுமே காணப்படுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மீதான மதிப்பும், நம்பிக்கையும் குறையும். குடும்ப வாழ்க்கையிலும், அலுவலகத்திலும் இணக்கமான சூழல் காணப்படாது. உங்களுக்கான தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும். வீண் செலவுகள் செய்து வருத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும். கடன் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். பணம் சார்ந்த பிரச்னைகளால் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் நிலவும்.
கும்ப ராசி (Puthandu rasi palan Kumbam): புத்தாண்டின் தொடக்கத்தில் ஜென்ம சனியால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சனிப் பெயர்ச்சியின்போது பாத சனி தொடங்குவதால் கொஞ்சம் நிதானமடைவீர்கள். ஏற்கனவே ஜென்ம சனியால் பல்வேறு இழப்புகளைச் சந்தித்திருக்கும் உங்களுக்கு அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த பிரச்னைகளில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
புத்தாண்டு தொடக்கத்தல் இருந்தே ஆன்மிகத்திலும், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவது நல்ல பலன்களைத் தரும். மனம், உடல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து கொஞ்சம் உங்களை தற்காத்துக் கொள்ள இது உதவும். வேலை, தொழில்களில் கடின உழைப்பை போடுவதன் மூலம் நல்ல பலன்களைக் காண்பீர்கள். மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர்களுக்கு உதவுவது போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவது நன்மை தரும். இதுவரை எந்தவிதமான பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டு வந்ததோ அதில் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம்.
எதிர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த சிந்தனை, எல்லோரிடமும் கனிவாகப் பேசுவது மற்றும் அனைத்து செயல்களிலும் நிதானத்துடனும், புத்திசாலித்துடனும் செயல்படுவது உங்களுக்கு ஏற்றத்தை உண்டாக்கும்.
பரிகாரங்கள்: கும்பம், மேஷம், சிம்மம், மீனம் தவிர்த்து மற்ற ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு பிரச்னைகளில் இருந்து உங்களைக் காக்க உதவும். நவக்கிரக கோயில் வழிபாடு செய்வது அனுகூலத்தை உண்டாக்கும். ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் கோயில், குரு வழிபாடு செய்வது நல்லது. தர்ம காரியங்களில் ஈடுபடுவது சனியின் தாக்கத்தில் இருந்து உங்களைக் காக்க உதவும்.












Click it and Unblock the Notifications