ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2023: வெற்றிகள் வீடு தேடி வரும்..எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?
சென்னை: 2023ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், யாருக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம். மிதுன ராசியில் உள்ள மிருகஷீரிடம் 2,3, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்களின் யாருடைய வீட்டில் அதிர்ஷ்ட தேவதை குடியேறப்போகிறாள் அன்னை மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைக்கப்போகிறது..புத்தாண்டில் யார் வீட்டிற்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கப்போகிறது. கேதுவின் நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. குரு மீன ராசியில் ஆட்சி பெற்றிருக்க, சனி பகவான் மகர ராசியில் சுக்கிரன் உடன் சேர்ந்திருக்க,தனுசு ராசியில் புதன் வக்ர நிலையில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். மேஷ ராசியில் ராகு சந்திரன், ரிஷப ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு அற்புதபலன்களைத் தரப்போகிறது. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். காரணம் கண்டச்சனி, அஷ்டம சனியில் படாத பாடு பட்ட உங்களுக்கு இனி எல்லாம் நலமாகவே அமையும். மிதுன ராசியில் உள்ள மிருகஷீரிடம் 3,4ஆம் நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்களே..செவ்வாய் பகவான் உங்கள் நட்சத்திர அதிபதி. உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் தடைகள் இன்றி நடைபெறும். சொந்த வீடு, வாகன சேர்க்கை ஏற்படும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வேலை விசயமாக வெளியூர் செல்லும் பயணங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வேலையாட்களிடம் அதிக அக்கறை தேவை. புதிய முதலீடுகள் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவைப்படும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். நெருக்கடியான கால கட்டங்களை கடந்து வந்திருப்பீர்கள். பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது. அமாவாசை பவுர்ணமி நாட்களில் குல தெய்வத்தை வணங்குவது நன்மையைத் தரும்.
ராகுபகவானை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களே..புதிய தொழில் வியாபாரத்தில் முதலீடுகள் செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய பிரச்சினைகள் வந்தாலும் மளமளவென தீரும். சொத்து பாகப்பிரிவினைகள் எளிதில் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலத்தில் கடன் கிடைக்கிறதே என்று வாங்காதீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்கும். பெண்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். கணவரிடம் இருந்து இந்த ஆண்டு அன்பான பரிசுகளை வெல்வீர்கள். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3 நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்களே.. உங்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. உங்களின் நட்சத்திர அதிபதி குருபகவான். கடந்த பல ஆண்டு காலமாகவே கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை சீரடையும் கடன் பிரச்சினைகள் நீங்கும். உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். புத்தாண்டில் நன்மைகள் அதிகம் நடைபெற நீங்கள் சனிக்கிழமைதோறும் எள்தீபம் ஏற்றி வணங்கலாம்.












Click it and Unblock the Notifications