சனி பெயர்ச்சி 2022... ஏழரை சனியின் ஆட்டம் ஆரம்பம்... யாருக்கு யோகம்... யாருக்கு சோகம்?
இதுநாள் வரை லாப சனியாக இருந்த சனிபகவான் இனி விரைய சனியாக அமரப்போகிறார். மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இந்த ஏழரை சனி சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார். யாருக்கெல்லாம் யோகம் யாருக்கெல்லாம் சோகத்தை தரப்போகிறார் சனிபகவான் என்று பார்க்கலாம்.
சனி பகவான் மீன ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி அவரே லாப ஸ்தான அதிபதியும் ஆவார். 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம்.
மீன ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது.
மீனம் விரைய சனி
சனி பகவான் 12ஆம் வீட்டில் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி.

எதிரிகளால் தொல்லை
குடும்ப ஸ்தானத்தை சனிபகவான் பார்வையிடுவதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். எனவே பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமம் தேவை. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும்.

பண விசயத்தில் கவனம்
போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி மறதி வரலாம் ஞாபகசக்தி குறைவினால் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கவனம் தேவை.

கும்பம் ஜென்ம சனி
கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம். கும்ப ராசிக்கு ஜென்ம சனி நடைபெறுவதால் ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஏழு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமண விசயத்தில் கவனம் தேவை தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டு.

மகரம் பாதசனி
மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம் முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. வாகன பயணங்களில் கவனம் தேவை. மிதமான வேகம் அவசியம். கோபத்தை கட்டுப்படுத்தவும். சனிபகவான் உங்கள் ராசி அதிபதி, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் பேச்சில் நிதானம் அவசியம். வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, எட்டு, 11ஆம் வீடுகளின் மீது விழுவதால் செய் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். நிறைய லாபங்கள் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதிப்பாருங்கள். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாகக் கடந்து விடலாம். சனிபகவான் தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள்.












Click it and Unblock the Notifications