செல்வம் பொங்க.. மகிழ்ச்சி பொங்க.. நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிடுங்கள்
மதுரை: உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். மகர மாதமாகவும் தை மாதம் அழைக்கப்படுகிறது. இயற்கைக்கு நன்றி சொல்லி வணங்கினால் பொங்கல் பொங்குவது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
இயற்கைக்கு நன்றி: தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கு நன்றி கூற வேண்டும். மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.

நான்கு நாட்கள் பண்டிகை: இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும். உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ஒன்றாக அமர்ந்து உண்டு ஒற்றுமையாக கொண்டாடுவதே பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சமாகும்.
ஒளி தரும் சூரியன்: ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பொங்கலோ பொங்கல்: பொங்கல் பண்டிகை நாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும்,இந்திரன், சூரியன், உபேந்திரனுக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.
நல்ல நேரம்: இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 06.30 முதல் 07.30 வரை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கலாம். 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல்
சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். எம கண்டம், குளிகை நேரம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினால் செல்வம் பெருகும்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.












Click it and Unblock the Notifications