குரு அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம்.. எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு .. பரிகாரம் என்ன?
சென்னை: சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை நிகழவுள்ளது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சித்திரை அமாவாசையான வியாழக்கிழமை குருவாரத்தில் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பார்க்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவோ, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி, இந்த கிரகணம் குரு அமாவாசை அன்று நடைபெறுகிறது. கிரகணம் நிகழ்ந்து ஒரு நாள் கழித்து குரு தனது ராசியை மாற்றிக் கொள்ள இருப்பது மிகவும் முக்கியமானது.

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. எனவே கிரகங்களின் நிலை காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் மற்றும் வியாழக்கிழமை அமாவாசை தினங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20, 2023 வியாழன் அன்று நடைபெறுகிறது. இந்த கிரகணம் காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணிக்கு முடியும். இந்த முறை சூரிய கிரகணத்தின் காலம் 5 மணி 24 நிமிடங்கள் இருக்கும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால், கிரக தோஷ காலம் இங்கு செல்லாது என்றாலும் இந்த சூரிய கிரகணத்தின் போது, சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்த்து கவனமாக இருக்கவும்.
கடகம் ராசி சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் சூரியனுடன் இருப்பார். இந்த நிலை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் எனவே கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் சந்திராஷ்டமம் வேறு உள்ளதால் கன்னி ராசிக்காரர்கள் கண்டிப்பாக வாகன பயணங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் தோஷம் ஏற்படும். காரணம் செவ்வாய் ஆட்சி செய்யும் ராசியில் கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் விருச்சிக ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள். தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு சாப்பிடலாம்.
கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள். வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனால் கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
சித்திரை மாத அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடுவது, தானம் செய்வது, தியானம் செய்வது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு அமாவாசை அன்று குரு பகவானையும் வழிபட சிறப்பு பலன் கிடைக்கும். இந்த நாளில் குரு பகவானை வழிபடுவதன் மூலம் குரு தசை, குரு தோஷம், முன்னோர்களால் ஏற்பட்ட தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications