லாரி ஓட்டுநர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசின் ஜில் ஜில் அறிவிப்பு.. என்னன்னு பாருங்க
டெல்லி: சொகுசுப் பேருந்துகளின் வரிசையில், லாரிகளிலும் ஏசி வசதியுடன் கேபின் கட்டமைப்பை மேம்படுத்துமாறு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. லாரி ஓட்டுநர்களுக்கான இந்த ஏசி நடைமுறை 2025 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
லாரிகள் என்றால் பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் தோற்றம், நெடுஞ்சாலைகளில் அதிக பாரத்துடன் நீண்ட தூர பயணம், சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனம் என்பது தான் நியாபகம் வரும். லாரி ஓட்டுநர்கள் என்றால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள். இரவெல்லாம் தூங்காமல் நமக்காக அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்பவர்கள் என்று நமக்கு தெரியும்.

லாரிகள் என்பது சரக்குகளை கையாளும் வாகனம் என்பதால் அந்த வாகனத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இருக்காது. லாரிகளில் டிரைவர் உட்காரும் கேபின் எப்படி இருக்கும் என்றால், ஒரு லாரி டிரைவர் அதில் படுத்துக்கொள்ள முடியும். ஒரு டிரைவர் வாகனத்தை ஓட்டலாம். ஒரு கிளினர் உட்கார முடியும். அவ்வளவு தான வசதி இருக்கும்.
வெயில், மழை, புயல் என எது வந்தாலும் லாரி டிரைவர்கள் தாங்கித்தான் வாகனத்தை ஓட்டி வர வேண்டும். குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் லாரி டிரைவர்கள் இரவில் சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுக்கக்கூட முடியாது. ஏனெனில் ஒரு பக்கம் கொசு தொல்லை. மறுபக்கம் புழுக்கம் அதிகமாக இருக்கும். மிக கடினமான பணியை லாரி ஓட்டுநர்கள் செய்து வருகிறார்கள். லாரிகளில் வரும் அதிக வெப்பம் காரணமாக லாரி டிரைவர்களின் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தது.
இப்படியான சூழ்நிலையில், இந்தியாவில் ஓடும் அனைத்து லாரிகளிலும் ஓட்டுநர் கேபினில் ஏசி வசதி கட்டாயமாக்கி உள்ளார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி. விற்பனைக்கு வரும் லாரிகளில் ஏசி கேபின் வசதியை கட்டாயமாக்கும் கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்காரி கூறும் போது, "இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் தினத்துக்கு 14 மணி நேரம் வரை தொடர்ந்து வாகனம் ஓட்டுகின்றனர். 47 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் தகிக்கும் கேபினில் அவர்கள் தினமும் செல்கிறார்கள். ஓட்டுநர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும் விரைவில் அவர்கள் களைப்படையவும், அதன் காரணமாக விபத்துகள் நேரிடவும் வாய்ப்பாக உள்ளது. இவற்றைத் தவிர்க்க இனி லாரி கேபினில் ஏசி வசதி கட்டாயமாக்கப்படுகிறது" என்றார்.
இது ஏதோ இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 2016 முதலே சாலை போக்குவரத்து அமைச்சகம் இதற்கு முயற்சி செய்தது. ஆனால் இதற்கு வாகன உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பும் எழுந்தது. லாரி உற்பத்தியாளர்களும் உடனே மாற்றுவது எளிதல்ல என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இந்த உத்தரவு அரசாணையாக மாறி உள்ளது. இதனை உடனடியாக அமல்படுத்துமாறு அமைச்சகம் தெரிவித்த போதிலும், வாகன உற்பத்தியாளர்கள் தரப்பில் ஒன்றரை வருட அவகாசம் கோரி இருக்கிறார்கள் எனவே, 2025 முதல் இந்தியாவின் அனைத்து லாரிகளும் ஏசி வசதியுடன் வலம் வர துவங்கும். அதேநேரம் ஏசி வசதி காரணமாக லாரிகளின் விலையில் சுமார் ரூ20 ஆயிரம் வரை உயரவும் வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications