தேசிய நெடுஞ்சாலைகளில் விஐபி கலாச்சாரம் ஒழியும்! அதிகாரிகளுக்கு சுங்கக்கட்டண விலக்கு ரத்து! திட்டம்
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிகாரிகள் மற்றும் விஐபிக்களுக்கு வழங்கப்படும் சுங்கக்கட்டண விலக்கு முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. மத்திய அரசு இந்த விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் முக்கிய முடிவை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களிடையே நிலவும் அதிருப்தியை போக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் பல்வேறு வகையான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்லும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள், அவர்களது வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு ஊர்வலங்கள் இந்த விலக்கை பயன்படுத்தி வருகின்றன. இந்த முறை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இதை மறுஆய்வு செய்து வருகிறது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளில் திருத்தம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இந்தக் குழு, கட்டண விலக்கு பெறும் விஐபி பிரிவினரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும் என சிபாரிசு செய்துள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கு வழங்கப்படும் சுங்கக்கட்டண விலக்கு முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக பிற வகையான விலக்குகளும் மறுஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படாமல், படிப்படியாக (Phased Manner) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் இனி சுங்கக்கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'பாஸ்டேக் வருடாந்திர பாஸ்' (FASTag Annual Pass) முறையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸின் விலை ரூ.3,075 ஆகும். ஒரு வருடத்திற்கு 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாக கடக்கலாம். சராசரியாக ஒரு சுங்கச்சாவடிக்கு வெறும் 15 ரூபாய் மட்டுமே செலவாகும். தேவைப்பட்டால் ஒரு வருடத்திற்குள் பலமுறை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
அரசு ஊழியர்கள் இந்த பாஸை தங்கள் சொந்த பணத்தில் வாங்கி, பின்னர் தங்கள் துறையில் இருந்து ரீஇம்பர்ஸ்மெண்ட் (Reimbursement) பெற்றுக் கொள்ளலாம். மொபைல் போன் பில் ரீஇம்பர்ஸ்மெண்டை விட இது அரசுக்கு மிகக் குறைந்த சுமையே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினருடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போதைய விதிகளின்படி, குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 25 முக்கிய பதவிகளில் உள்ளவர்களுக்கு இன்னும் சுங்கக்கட்டண விலக்கு தொடரும். அதேபோல், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், ஈமச்சடங்கு வாகனங்கள், ரோந்துப் படைகள் போன்ற அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கும் விலக்கு தொடரும்.
இருப்பினும், பொதுமக்கள் மற்றும் பல அரசு அதிகாரிகளுக்கு இந்த விலக்கு ரத்து செய்யப்படுவது பெரும் நிவாரணமாக பார்க்கப்படுகிறது. விஐபி கலாச்சாரம் காரணமாக சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களின் நேர விரயம் ஆகியவை இனி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (IHMCL) மூலம் வழங்கப்படும் 'விலக்கு அளிக்கப்பட்ட பாஸ்டேக்' முறை தொடரும். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு புதிய வருடாந்திர பாஸ் முறை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த முடிவு அமலுக்கு வந்தால், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வருவாய் அதிகரிக்கும். அதேவே, அனைவரும் சமமாக கட்டணம் செலுத்தும் சமத்துவ சமூகம் உருவாக உதவும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும்












Click it and Unblock the Notifications