Sea Bridge: இதுவரை இந்தியாவிலேயே இல்லாத.. மிகப்பெரிய கடல்பாலம்.. 65 கிமீக்கு சென்னையில் நடக்கும் பிரம்மாண்டம்
சென்னை: சென்னை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை 65 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய கடல்வழிப் பாலம் (sea bridge) கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்கான டிபிஆர் பணிகள் இந்த மாதம் தொடங்க உள்ளது.
இத்திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தற்போது ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடல்வழிப் பாலம் (sea bridge) கட்டி முடிக்கப்பட்டால், அது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக அமையும். தற்போதைய நிலையில், 21.8 கி.மீ நீளமுள்ள மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலமே இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணூரில் இருந்து பூஞ்சேரி கடல்பாலம் (sea bridge)
சுமார் ரூ.25,000 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கடல் பாலம், திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் நகரின் பிற பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய சாதக அம்சம், பெரும்பாலான பாலம் கடலுக்கு மேல் அமைக்கப்படுவதால், நிலம் கையகப்படுத்துதல் குறைவாக இருக்கும். குடியிருப்புப் பகுதிகளைத் தவிர்த்து பாலம் கட்டப்படுவதால், உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும். மேலும், மீனவர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் வாய்ப்பும் வெகுவாக குறையும்; ஏனெனில் முந்தைய சாலை திட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது.
பாலம் (sea bridge) கட்டும் பணி - டிபிஆர்
பாலம் கட்டும் பணி பல கட்டங்களாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை பாலம் கட்டப்படலாம். பின்னர், இது எண்ணூர் வரையிலும், தெற்கே பூஞ்சேரி வரையிலும் நீட்டிக்கப்படும். இதற்கான டிபிஆர் பணிகள் இந்த மாதம் தொடங்க உள்ளது.
இந்த கடல் பாலம், சிறந்த சாலை மற்றும் துறைமுக இணைப்பை மேம்படுத்தும் அரசின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது. 133 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை வெளி வட்டச் சாலைக்கு இது உறுதுணையாக இருக்கும். இந்த பாலம் தமிழகத்தின் கடலோர பயணத்தை மாற்றி அமைக்கும் என்று அரசு கருதுகிறது. தற்போது, திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
சென்னை கடல் பாலம் (sea bridge)
இதற்கிடையே, 21.6 கி.மீ நீளமுள்ள சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் முடங்கியிருந்த பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு, வானகரத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த உயர்மட்டப் பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் வரையிலான தொலைவுக்கு இரட்டை அடுக்காக கட்டப்படும். 20.6 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த பாலத்தில், பல்வேறு சாலைகளிலிருந்து இணைவதற்காக 7 நுழைவுப் பகுதிகளும், வெளியேறுவதற்காக 6 இடங்களும் அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டன. 20.9 கி.மீ நீளமுள்ள துறைமுகம் - மதுரவாயல் வழித்தட பணிகளுக்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை 200 மீட்டர் நிலத்தை மீட்டெடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications