ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!!
சென்னை: ஆட்டோமொபைல் துறையில் பல தசாப்தங்களாக ஜப்பான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தது. டொயோட்டா, ஹோண்டா, நிஸான் போன்ற பிராண்டுகள் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உலகப் புகழ் பெற்றது. ஆனால் தற்போது இந்த சீன் மொத்தமாக மாறத் தொடங்கியுள்ளது.
சீனாவின் மலிவு விலை மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட வாகனங்கள் ஜப்பானின் இடத்தை பிடித்து வருகின்றன. உலக அளவில் சீன வாகன உற்பத்தியாளர்கள் இப்போது பெரிய அளவில் வர்த்தகத்தை பெற்று ஜப்பானுக்கு தண்ணி காட்டி வருகிறது.

சீனாவின் வாகனங்கள் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் முடக்கப்பட்டு இருக்கும் வேளையில் பெரும் சாதனையை படைத்துள்ளது பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இதேவேளையில் ஒரு காலக்காலத்தில் தொழில்நுட்ப துறையில் கொடிக்கட்டி பறந்த ஜப்பானுக்கு பெரும் ஆதிக்கம் செய்யும் ஒரு துறை என்றால் அது ஆட்டோமொபைல் துறை தான், தற்போது இதற்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, உலக அளவிலான வாகன விற்பனையில் சீன நிறுவனங்கள் சுமார் 28 சதவீதத்தை கைப்பற்றியுள்ளன. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த பங்கீடு கிட்டத்தட்ட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இதே காலகட்டத்தில் ஜப்பானின் பங்கு 7 சதவீதம் குறைந்து 25 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பான் பதிவு செய்த மிகக் குறைந்த அளவாகும்.
இந்த மாற்றத்தின் மூலம் சீனா உலகின் மிகப்பெரிய வாகன விற்பனை நாடாக உருவெடுத்துள்ளது. ஜப்பான், நீண்ட காலமாக வைத்திருந்த முதலிடத்தை இப்போது இழந்துவிட்டது. இந்தப் போக்கு உலக வாகனத் தொழிலில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

சீனா எப்படி இவ்வளவு வேகமாக முன்னேறியது?
சீனாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அதன் மலிவு விலை உத்தி. உயர்தர மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பெட்ரோல் வாகனங்களை ஜப்பான், ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைந்த விலையில் சீன நிறுவனங்கள் சந்தைக்குக் கொண்டு வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பம், அரசின் ஆதரவு, பெருமளவிலான உற்பத்தித் திறன் ஆகியவை சீனாவுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளன.
குறிப்பாக, BYD, NIO, Geely போன்ற சீன பிராண்டுகள் உலக நாடுகளில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. அவை தரத்திலும் போட்டியாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மலிவான விலையில் நல்ல வாகனங்களைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர். இதனால் உலக அளவில் சீன வாகனங்களின் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது.
ஜப்பான் எதிர்கொள்ளும் சவால்கள்
ஜப்பான் நிறுவனங்கள் உயர்தரம் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றவை. ஆனால், அதிக உற்பத்திச் செலவு, மின்சார வாகனத் துறையில் சற்று தாமதமான நுழைவு ஆகியவை அவர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன. உலக நாடுகள் சுற்றுச்சூழல் நட்பு வாகனங்களை நோக்கி நகரும் நிலையில், சீனாவின் வேகமான முன்னேற்றம் ஜப்பானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியால் ஜப்பானின் வாகனத் தொழில் பெரும் மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல ஜப்பான் நிறுவனங்கள் இப்போது தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
2035 கணிப்பு
நிபுணர்களின் கணிப்பின்படி, 2035-ம் ஆண்டுக்குள் உலக வாகன விற்பனையில் சீனாவின் பங்கு 34 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜப்பானின் பங்கு மேலும் குறைந்து 22 சதவீதமாக சுருங்க வாய்ப்பு உள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உலக வாகனச் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் இன்னும் வலுப்பெறும்.
இந்தியாவில் என்ன நிலை
இந்த மாற்றம் இந்திய வாகனச் சந்தைக்கும் முக்கியமானது. சீனாவின் மலிவு வாகனங்கள் இந்தியாவிலும் போட்டியை அதிகரிக்கும். டாடா, மஹிந்திரா உள்ளிட்ட இந்திய பிராண்டுகள் ஏற்கனவே மின்சார வாகனத் துறையில் கவனம் செலுத்தி வருகின்றன.
உலக வாகனத் தொழில் இப்போது ஒரு புதிய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications