வயநாடு நிலச்சரிவு.. டேங்கர் லாரியால் உயிர் தப்பினோம்.. மதுரை தம்பதி கண்ணீர் மல்க பேட்டி
கோவை: கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை நிலச்சரிவு அடித்துக்கொண்டு 100 மீட்டர் தள்ளிவிட்டது. அப்படி டேங்கர் லாரி குறுக்கே வந்து நின்றதால் நிலச்சரிவில் சிக்காமல் உயிர்தப்பி உள்ளார்கள் மதுரை தம்பதி.. என்ன நடந்தது என்பதை கண்ணீர்மல்க விளக்கி உள்ளார்கள்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள பகுதிகள் நிறையவே உள்ளன. அங்குள்ள மேப்பாடி நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியாகும். அந்த மேம்பாடி அருகே உள்ள பகுதி கல்லாடி. இங்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த இடத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாட்சி பாலத்தை கடந்தவாறு டேங்கர் லாரி அடித்து வரப்பட்டது.

இதில் அடித்து வரப்பட்ட டேங்கர் லாரிக்கு அடியில் சிக்கி தமிழகத்தின் மதுரை பகுதியை சேர்ந்த பால்ராஜ், கூடம்மா தம்பதி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளாரகள். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. டேங்கர் லாரி மற்றும் ஜீப் காரணமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.
நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியது குறித்து மதுரைச் சேர்ந்த பால்ராஜ், கூடம்மா தம்பதி கூறுகையில்,"என்னுடைய அப்பா காலத்தில் மதுரையில் இருந்து வயநாட்டுக்கு குடிபெயர்ந்தேன். எனது மனைவிக்கு மதுரை திருமங்கலம் சொந்த ஊராகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பத்துடன் வயநாட்டில் வசித்து வருகிறோம்.
மேப்பாடி அருகே 6 கி.மீ. தொலைவில் மீனாட்சி என்ற இடத்தில் தனியார் எஸ்டேட்டில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறோம். நேற்று முன்தினம் மீனாட்சியில் இருந்து மேப்பாடிக்கு செல்வதற்காக நாங்கள் பாலம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது சற்று தூரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த இடத்தில் கண் இமைக்கும் நேரத்தில் நிலச்சரிவு ஏற்படுவதை பார்த்தோம். அப்போது முழு மலையுமே சரிந்து வருவது போல் இருந்தது.
அப்போது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த டேங்கர் லாரியையும் அடித்துக்கொண்டு மண்சரிவு மிக வேகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வேகமாக ஓடத்தொடங்கினோம். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் நிலச்சரிவு வந்து மூடியதில் பலர் சிக்கி கொண்டோம். அப்போது மண் சரிவில் ஒரு டேங்கர் லாரியும் அடித்து வரப்பட்டு அங்கு நிறுத்தி இருந்த ஜீப் மீது மோதி குறுக்கே வந்து நின்றது. இதனால் தப்பி ஓடி வந்த நானும், எனது மனைவியும் அதிர்ஷ்டவசமாக தப்பினோம்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை பார்த்ததும் எங்களது குழந்தைகளை நினைத்துக்கொண்டு வேகமாக ஓடினோம். அதிர்ஷ்டவசமாக லாரியும் குறுக்கே வந்து நின்றதால் உயிர்பிழைத்தோம்'" இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு புதைந்து பலியாகினர். மேலும் 9 பேர் காயம் அடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி இந்த 5 பேரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.














Click it and Unblock the Notifications