இவி வாகனங்கள் வாங்க போறீங்களா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. வரி குறையுது?
சென்னை: மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் மொபைல் போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல பொருட்களுக்கு இறக்குமதி வரிகள் இல்லை என்று மத்திய அரசு கூறி உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக போர் தொடங்கும் அபாயம் உள்ள நிலையில் மத்திய அரசு அடுத்தடுத்து வரிகளை குறைத்து வருகிறது.
தற்போது மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் மொபைல் போன்களின் மீதான வரிகளை குறைக்க முடிவு செய்துள்ளனர். மூலப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.. EV பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் 35 பொருட்களுக்கும், மொபைல் போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 28 பொருட்களுக்கும் இறக்குமதி வரியில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கும் என்று அறிவித்து உள்ளது.
இவி வாகனங்கள்
உலகம் முழுக்க மக்கள் இடையே EV கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு பின்னணியில், மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன. இந்தியாவிலும் கூட கடந்த வருடம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் கூட வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.
ஒரே விலை
ஏற்கனவே இந்தியாவில் இவி வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவி வாகனங்களுக்கு நிறைய வரி சலுகைகள் கொடுக்கப்பட்டன. இது போன்ற சலுகைகள் வேகமாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் (EV) விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் மொபைல் போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல பொருட்களுக்கு இறக்குமதி வரிகள் இல்லை என்று மத்திய அரசு கூறி உள்ளது. இதனால் இவி வாகனங்கள் மீதான வரிகள் ஓரளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி குறைப்பிற்கு அமெரிக்கா காரணமா ?
Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வர்த்தக போரை தடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தி வரும் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் 23 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க இந்தியா முன் வந்துள்ளதாம்.
அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிக்கான வரியை பாதிக்கு பாதி குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாம்.
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications