சூப்பர்.! இறங்கி அடிக்கும் தமிழ்நாடு.. இதுதான் அடுத்து எதிர்காலமே! வியக்கும் மற்ற மாநிலங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகன துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மின்சார வாகன உற்பத்தித் துறையே முக்கிய காரணமாக அமையப் போகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. ஒருவேளை அதன் விலை குறைந்தாலும் கூட, ஒபெக் நாடுகள் ஒன்றாக இணைந்து அதன் விலையை ஏற்றிவிடும். இதுபோன்ற நிகழ்வுகளே தொடர்ந்து நடந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கிறது. இப்போது பலருக்கும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதைக் காட்டிலும் அதற்கு எத்தனை பெட்ரோல், டீசல் போட வேண்டும் என்பதே கவலையாக இருக்கும்.

மின்சார வாகனங்கள்: இதன் காரணமாகவே இப்போது மின்சார வாகனங்கள் சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இவை மோட்டார் வாகனங்களால் ஏற்படும் மாசையும் குறைப்பதால் பல்வேறு நாடுகளும் இதில் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் உலகளவில் மின்சார கார்களின் மார்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக சில ஐரோப்பிய நாடுகளில் மின்சார கார்களை அதிகப்படியானோர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அந்தளவுக்கு மின்சார வாகனச் சந்தை இல்லை.
இப்போதைக்கு கார்களில் டாடா, ஹூண்டே மற்றும் மஹேந்திரா போன்ற நிறுவனங்கள் மட்டுமே மின்சார கார்கள் துறையில் கவனம் செலுத்துகிறது. அதேநேரம் பைக் சந்தையில் ஓலா, டிவிஎஸ், ஏதர், ஹூரோ இப்போது புதிதாக பஜாஜ் எனப் பல நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை வரும் காலங்களில் மின்சார டூ வீலர் சந்தையே வேகமாக அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு: ஆட்டோமொபைல் துறையில் நிச்சயம் மின்சார வாகனங்கள் தான் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குக் காரணமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.. எந்தவொரு துறையாக இருந்தாலும் தமிழ்நாடு தான் முதலில் அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளது. ஐடி தொடங்கிக் கடந்த காலங்களில் நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இப்போது இந்த மின்சார வாகன துறையையும் தமிழ்நாடே பக்காவாக பயன்படுத்துகிறது.
ஏற்கனவே ஓலா, சிம்பிள் எனப் பல மின்சார வாகனங்களின் தொழிற்சாலை ஓசூரில் அமைந்துள்ளன. இதற்கிடையே மேலும் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இதற்காக உலகப் பொருளாதார அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு, மின்சார வாகன திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், மின்சார ரூ.49000 கோடி முதலீடுகளைப் பெறவும் தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஆலோசனை: இது தொடர்பாகச் சமீபத்தில் தான் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆலோசனை நடத்தியிருந்தார். இதில் சர்வதேச அளவில் டாப் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் தொடங்கி பலரும் கலந்து கொண்டனர். மின்சார வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வலுவான ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி சூழலை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் பெரியளவில் பயன்பெறும்.

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ஏற்கனவே தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட 'தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023' வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை எளிமையாக்கும் வகையில் வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாகச் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு நகரங்களில் சர்வதேச தளத்தில் மின்சார வாகன மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
மின்சார வாகனங்களின் தலைநகர்: கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் முக்கிய மின்சார வாகன உற்பத்தி மையமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இந்தியாவின் EV தலைநகராகத் தமிழ்நாடு மாறியுள்ளது என்றே சொல்லலாம். கொரோனா காலத்திலும் கூட மின்சார வாகன துறையில் தமிழ்நாடு அரசு 24,000 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்றது. இதன் மூலம் புதிதாக 48,000 வேலைவாய்ப்புகள் உருவானது.
வரும் காலங்களில் மின்சார வாகன துறையில் நிச்சயம் தமிழ்நாடு மேலும் மேலும் வளரவே செய்யும். முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கவே செய்யும். எனவே, இந்த துறைதான் மாநிலத்தில் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications