இப்படியே போனால் தமிழ்நாடு பின்தங்கிடும்.. எங்கும் எக்ஸ்பிரஸ் வே.. தட்டி தூக்கும் வட மாநிலங்கள்! ஷாக்
சென்னை: தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.

இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது, இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது.
ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.
உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட வில்லை.
தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
என்ன காரணம்: போதிய நிலம் கிடப்பது இல்லை, விவசாய நில பிரச்சனை, மக்கள் போராட்டம், திட்டத்தின் தேவை புரியாமல் இருப்பது இந்த பிரச்சனைக்கு காரணமாக மாறி உள்ளது.
இரண்டு திட்டங்கள்: சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது.
அதில் தமிழ்நாட்டு திட்டங்களும் அடங்கும். இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் அளவு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை டூ திருச்சி 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும்.
எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications