Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Book Review: மின்னல் மொழி நடை.. புத்தகப் பிரியர்களுக்கு பிரமாண்ட வேட்டை.. ஆதித்யன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் எழுத்தா இது.. என்று எடுத்த எடுப்பிலேயே வியப்புடன் கேட்க வைத்து விடுகிறார் எழுத்தாளர் சுசரிதா.. அப்படி ஒரு அமர்க்களமான மொழி ஆளுமை, மொழி நடை, வார்த்தைப் பிரயோகம்.. நல்ல தமிழ் நடையில் இப்படி ஒரு சரித்திரப் புதினம் படித்து எத்தனை நாட்களாகிறது என்ற எண்ணம்தான் இந்த புத்தகத்தைப் படிப்போருக்கு நிச்சயம் தோன்றும்.

பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுசரிதா, பெண் எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு புதுமுகம். ஆனால் அறிமுக நாவலான ஆதித்யன்.. மிக மிக சிறப்பாகவே வந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

Book review of writer Susarithas Adhtiyan

புத்தகங்கள் படிப்பது என்பது இன்று ஒரு அருகி விட்டது. எத்தனை பேருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது.. நிச்சயமாக அது குறைந்து விட்டது. மாறாக செல்போன்களில் நுனிப் புல் மேய்வது போல மேலோட்டோமாக படிப்போர்தான் பெருகி விட்டனர். இதன் காரணமாக சிறந்த எழுத்தாளர்கள் பலரும் கூட இன்று வாசிக்க ஆள் இல்லாத நிலையால் சோர்வுறும் நிலைக்குப் போய் விட்டனர்.

ஆனாலும் மிகப் பெரிய வாசிப்புத்தளம் கொண்ட சமுதாயம் நம் தமிழ்ச் சமுதாயம். இங்கு எழுத்துக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. புத்தகத் திருவிழாக்கள் நடத்தி வாசிக்கும் ஆர்வம் கொண்டோரை ஆண்டுதோறும் வசீகரிக்கத் தவறாத இனமாயிற்றே நம் தமிழ் இனம். இப்படிப்பட்ட சமுதாயத்தில் சுசரிதா போன்ற பெண் திறமையாளர்களுக்கும் தனி இடம் நிச்சயம் உண்டு.

ஆதித்யன்.. இது சசரிதாவின் முதல் நாவல் ஆகும். புதின நாவலான இதன் முதல் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். கொரோனா காலம் என்பதால் இது மின் இதழாக வெளியாகியுள்ளது. நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக போகின்றன. ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் தொய்வைப் பார்க்க முடியவில்லை. குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதிகமாக விரவிக் காணப்படும் நிறைகளுக்கு மத்தியில் இந்த சின்னச் சின்ன குறைகள் மறைந்து போய் விடுகின்றன.

மொத்தம் 45 அத்தியாயங்கள்.. தித்திக்கும் தீந்தமிழில் தெவிட்டாத செந்தமிழில்.. வார்த்தைகளின் அருமையான அணிவகுப்பில் கம்பீரமாக உலா வருகிறான் ஆதித்யன். அவனது வீர தீர பராக்கிரமத்துக்கு மத்தியில் காதலையும் மென்மையாக இடைச் செருகி அழகுற கோர்த்துக் கொடுத்துள்ளார் சசரிதா. வழக்கமான கதைதானே என்று சொல்லி விட முடியாத அளவுக்குப் பார்த்துப் பார்த்து கதையை பக்குவமாக வடித்துள்ளார். வழக்கமான ராஜா ராணி கதைகளில் வருவது போன்ற சம்பவங்களை இதிலும் பார்க்க முடிகிறது என்றாலும் கூட அதை வடிவமைத்துள்ள பாங்கு நிறையவே வித்தியாசமாக இருக்கிறது.

ராஜா ராணி... இளவரசன், காதல், துரோகம், வீரம் என்று எல்லாவற்றையும் ரொம்ப பாலன்ஸ்டாக அழகாக நகர்த்திக் கொண்டு போயுள்ளார். கதையின் போக்கை வெகு அழகாக நகர்த்திச் சென்றுள்ளது சசரிதாவின் திறமைக்கு ஒரு சான்று. ஆதித்யன் - இன்ப யாழனியின் காதல் கதையை வெகு அழகாக விவரித்துள்ளார். பெரும் போர்க்களத்துக்கு மத்தியில் பூத்த அழகிய தாமரை போல பளிச்சென அந்தக் காதல் மட்டும் தனித்துவத்தோடு பிரகாசிக்கிறது. காதல் எப்போதுமே தனி அழகுதானே.. அதிலும் இந்த ஆதித்யன் - இன்பயாழினியின் காதல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வசீகரத்துடன் கதையோட்டத்துடன் கூடவே செல்கிறது.

ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து அனுபவித்து எழுதியுள்ளார் சசுரிதா. எதையுமே அவர் வலிந்து திணிக்கவில்லை.. எல்லாமே இயல்பாகவே வருவது முக்கியமானது. இதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுதுவோர் லயிப்புடன் எழுதினால் மட்டுமே படிப்போருக்கும் அந்த பக்குவம் போய்ச் சேரும். சுசரிதாவின் வார்த்தைதப் பிரயோகங்களும் பலே ரகம்தான்.. ஒரு உதாரணம்.. "காற்று போகும் திசையிலா அல்லது காலம் இவளைக் கொண்டு போகப் போகும் திசையிலா என்று தெரியவில்லை" என்ற வரிப் பிரயோகம்.. கதையின் போக்கை ஒரு வரித்துளியில் எத்தனை அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறார் பாருங்கள். "ஹீரோ" அறிமுகத்திற்கான முன்னோட்ட வரிதான் இது. ஆதித்யன் - இன்பாவின் அறிமுகமே அமர்க்களமான காதல் நெடி மூக்கைத் துளைக்கிறது.

வீரம், விவேகம், போர், பாய்வது, பதுங்குவது, சீறல், அன்பு, அமைதி, அறம், சீற்றம், சதி, சகுணித்தனம், காதல், மோதல், உணர்வு, பாசம் என எல்லாம் கலந்ததுதானே மனித வாழ்க்கை. சாமானியர்களுக்கு மட்டுமல்ல.. மாமன்னர்களுக்கும் கூட இதுதானே இயற்கை. அந்த அம்சங்களை தனது கதை நெடுகிலும் அழகாக அள்ளித் தெளித்து அருமையான கோலம் போட்டுள்ளார் எழுத்தாளர் சசுரிதா.

இலக்கிய மேற்கோள்களும் புதினம் நெடுகிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. பொருத்தமான இடத்தில் அவற்றை அழகாக இணைத்து தமிழின் மணம் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆதித்தயனுக்கும் - இன்பாவுக்கும் நேரிடுகிற அந்த அறிமுகம்.. அதன் விளைவால் இருவருக்குள்ளும் நிகழும் ரசவாதம் இவற்றை ஈர்ப்பு குறையாமல் அழகாக சொல்லியுள்ளார் எழுத்தாளர்... அதிலும் இன்பாவின் வாய் உச்சரிக்கும் அந்த "அம்மாடியோ" அழகிலும் அழகு. உண்மையிலேயே இந்த இன்பா படிக்கும் அத்தனை பேரையும் நிச்சயம் வசீகரிப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை.

உறவுக்குள் எழும் பகை.. உறவுகளுக்கிடையே நிகழும் மோதல், துரோகம், கோபம், குரோதம் என எல்லாம் கலந்த இந்த நாவலின் முடிவு நாம் யாரும் எதிர்பார்க்க முடியாதது.. அத்தனை அதிரடியாக முடித்துள்ளார் சுசரிதா.. நிச்சயம் மனம் சிலிர்த்துப் போவீர்கள்.. மொத்தத்தில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விடாமல் படித்து முடித்து எழும்போது மனசு நிறைய எண்ண அலைகள் .. அப்படி ஒரு பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறான் இந்த ஆதித்யன். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புதினம் இது.. தவறாமல் படியுங்கள்.

"ஆதித்யன் பாகம் 1" நாவல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த மின்நூலை வாங்குவதற்கு இருநூறு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் "கிண்டில் அன்லிமிடெட்" திட்டத்தில் இலவச வாசிப்பாக இது இருக்கிறது என்பது விசேஷமானது. நீங்களும் படித்து மகிழுங்கள்.

இணைப்பு:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+