வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் காணிக்கை கொடுத்த பிரபல நடிகை.. விழுந்த அடி! இப்போ வெளியிட்ட வீடியோ!
சென்னை: ஆந்திரா-தெலங்கானா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பாரம்பரிய திருவிழாவில் நடந்த ஒரு சம்பவம், தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. வளர்ப்பு நாயின் மீது வைத்திருந்த பாசம் காரணமாக கோவிலில் காணிக்கை செலுத்திய நடிகை டீனா ஸ்ராவ்யா, பழங்குடியின மக்களின் நம்பிக்கையை அவமதித்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.
வெப் சீரிஸ்கள் மூலம் பிரபலமான நடிகை டீனா ஸ்ராவ்யா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் அவருக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ', 'கமிட்டி குர்ரால்லு' உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவிலும் கவனம் பெற்றவர். இவரது சில வெப் சீரிஸ்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், தமிழ் ரசிகர்களுக்கும் அவர் பரிச்சயமான முகமாக மாறினார்.

ஜாதாரா திருவிழா
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடராம் கிராமத்தில் நடைபெறும் ஜாதாரா திருவிழாவில் நடிகை டீனா கலந்து கொண்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜாதாரா திருவிழா, பழங்குடியின மக்களுக்குப் பெரும் முக்கியத்துவம் கொண்டது.
சம்மக்கா மற்றும் சாரல்லம்மா என்ற தாய்-மகள் தெய்வங்களை தேவதைகளாக வழிபடும் மரபு, பல நூற்றாண்டுகளாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது, பக்தர்கள் துலாபாரத்தில் அமர்ந்து, தங்களின் உடல் எடைக்கு ஏற்ப வெல்லம் அல்லது பிற பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
துலாபாரத்தில் வளர்ப்பு நாய்
இதன் ஒரு பகுதியாக நடிகை டீனாவும் காணிக்கை செலுத்த வந்துள்ளார். ஆனால் அவர், தன்னுடைய வளர்ப்பு நாயை துலாபாரத்தில் அமர வைத்து, அதன் எடைக்கு ஏற்ப வெல்லத்தை காணிக்கையாக செலுத்தியதுதான் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து, தனது சமூக வலைதள பக்கங்களில் நடிகை டீனா வெளியிட்டுள்ளார். வழக்கமாக அவரது பதிவுகளுக்கு பாராட்டும் லைக்ஸும் குவியும் நிலையில், இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக பதிவானது. பழங்குடியின மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல் இது என்றும், பாரம்பரிய திருவிழாவை விளம்பரத்துக்காக பயன்படுத்தியதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து, நடிகை டீனா விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அது குணமடைந்ததற்காக நேர்த்திக்கடனாக இந்த காணிக்கையை செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.
கோரிக்கை
மேலும், தனது செயலால் யாருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தால் மனமார மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும், அந்த விளக்கம் பலருக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பழங்குடியின மக்கள் தேவதைகளாக வழிபடும் தெய்வங்களை இவ்வாறு தொடர்புபடுத்தியது தவறு என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஜாதாரா விழா ஏற்பாட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நடிகை டீனா விளக்கம்
வளர்ப்பு நாயின் மீதான பாசம் ஒரு பக்கம் என்றாலும், நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் எழுந்த முக்கியமான கருத்தாக உள்ளது. இந்த சம்பவம், சமூக வலைதள பிரபலங்கள் பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications