கூச்சம் இல்லாமல் ஜிப்பை கழட்டுறவங்க.. பெண்களை கேவலமாக பேசிய எஸ்வி சேகருக்கு, சின்மயி பதிலடி
சென்னை: பாலியல் குற்றங்கள் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் பேசிய கருத்து தற்போது பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது. அந்த பேச்சுக்கு நேராகவும் கடுமையாகவும் பதிலடி கொடுத்தவர் பாடகி சின்மயி ஸ்ரீபாதா. இந்த விவகாரம் இப்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

எஸ்.வி. சேகர் சர்ச்சை பேச்சு
ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி. சேகர், முதலில் சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருகிறது, குழந்தைகளுக்கு கலாச்சாரமும் ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற மாதிரி பேசியிருக்கிறார். அதோடு, எல்லா தவறுகளுக்கும் அரசாங்கத்தையே குறை சொல்லக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
ஆனா, அதற்குப் பிறகு பாலியல் குற்றங்கள் பற்றி கேள்வி கேட்டபோது தான் சர்ச்சை கிளம்பும் மாதிரி அவர் பேசியது. "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது" என்று ஆரம்பித்த அவர், "நான் என் வீட்டை பூட்டாமல் விட்டால் திருடன் திருடினான் என்றால் அதற்கு சட்டம் எப்படி பொறுப்பு?" என்று உதாரணம் சொன்னார்.
அதோடு மட்டும் இல்லாமல், "பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்... வெளியே சென்றால் கூட ஒருத்தரை உடன் அனுப்ப வேண்டும்" என்று கூறினார். இதற்குப் பிறகு தான் அதிக எதிர்ப்பு வந்த வரிகள் வந்தது. "ஒரு பெண் புதருக்குள் போனதாக சொல்கிறார்கள்... அவர் ஏன் அங்கு போனார்? புதருக்குள் போலீஸ் லைட் போட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். இந்த ஒரு பகுதி தான் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை கிளப்பியது.
பலரும் இது பாதிக்கப்பட்ட பெண்ணையே குறை கூறும் மாதிரி இருக்கிறது, இப்படிப் பேசக் கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தான் பாடகி சின்மயி ஸ்ரீபாதா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விஷயத்துக்கு நேரடியாக பதிலடி கொடுத்தார். அவர் சொன்னது மிகவும் நேரடியானதும், உண்மையை சொல்வதுமான பதிலாக இருந்தது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சின்மயி பதிலடி பதிவு
சின்மயி பதிவில், "ஒரு பெண் ஏன் புதருக்குள் போனார் என்று கேட்கிறீர்கள்... ஆனால் அந்த இடத்தில் கழிவறையே இல்லையென்றால் அவர் என்ன செய்வார்?" என்று கேள்வி எழுப்பினார். "அந்த பெண் இயற்கை உபாதையை கழிக்கத்தான் அங்கு சென்றார் என்று தகவல்கள் சொல்லுகின்றன" என்றும் கூறினார்.
அதோடு ஒரு பெரிய சமூக பிரச்சனையையும் சுட்டிக்காட்டினார். "இந்தியாவில் நிறைய பெண்களும், சிறுமிகளும் வெளியே கழிப்பதற்காக செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்... இது புதுசான விஷயம் இல்ல" என்று தெரிவித்துள்ளார்.
சின்மயி கேட்ட கேள்வி
இதை விட இன்னும் கடுமையாக, "ஆனால் உடல் காயம் ஏற்படும் என்ற அச்சமின்றி தாங்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் போதெல்லாம் பாதுகாப்பாக தங்கள் ஆடையின் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்க கூடிய ஆண்களால் இதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.. என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த வரிகள்தான் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டு ஆதரவு பெற்றது.
மக்கள் கருத்து
சின்மயியின் இந்த பதிலுக்கு பலரும் "இது தான் உண்மை", "இதை தான் யாராவது சொல்லணும்" என்று ஆதரவு தெரிவித்தனர். மறுபுறம், எஸ்.வி. சேகர் பேச்சுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் நேரடியாக அவரை விமர்சித்து, "பாதிக்கப்பட்டவரை கேள்வி கேட்பது தவறு", "குற்றவாளிகளையே குறை சொல்ல வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.
மன்னிப்பு கேட்ட எஸ்.வி. சேகர்
சர்ச்சை அதிகரித்த பிறகு தான் எஸ்.வி. சேகர் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். "என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது... யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை" என்று கூறினார். ஆனால் அதற்குப் பிறகும் இந்த விவாதம் நிற்காமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த முழு விவகாரம் ஒரு முக்கியமான விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு என்றால் அவர்களை கட்டுப்படுத்துவது அல்ல... அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டியது தான் முக்கியம்.
ஒரு பெண் எங்கு சென்றார் என்று கேட்பதற்கு பதிலாக, "அவர் ஏன் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை?" என்பதே கேட்க வேண்டிய சரியான கேள்வி என்பதையே இந்த சம்பவம் தெளிவாக காட்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications