ஜனநாயகன் vs பராசக்தி.. தணிக்கை பஞ்சாயத்து! எந்த படத்திற்கு, எவ்வளவு தியேட்டர் கிடைக்கும்? லீக்கான தகவல்
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு சாதாரணமானது இல்லை. காரணம், தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் - விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் - அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளை ஆக்கிரமிக்க வருகிறார்கள். ஒருபக்கம் விஜயின் கடைசி படம் 'ஜனநாயகன்', மறுபக்கம் சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி'. இரண்டும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு அடுத்த நாளே, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராசக்தி' ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆரம்பத்தில் பராசக்தி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தேதியை மாற்றி ஜனநாயகன் ரிலீஸுக்கு மறுநாளையே தேர்வு செய்தது தான் இப்போது பல கேள்விகளையும், பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது.

திரையுலக வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், ஜனநாயகன் ரிலீஸான முதல் நாளில், விநியோகஸ்தர்கள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகளுடன் ஒப்பந்தம் போடுவார்கள். அப்படி ஜனநாயகன் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகினால், பராசக்திக்கு 250 திரையரங்குகள் கூட கிடைக்காமல் போகும் அபாயம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான், திட்டமிட்டு 10ஆம் தேதியை பராசக்தி படக்குழு தேர்வு செய்ததாகவும் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1164 திரையரங்குகள் இருக்கும் நிலையில், தற்போது பேசப்படும் கணக்குப்படி, ஜனநாயகனுக்கு சுமார் 550 திரையரங்குகளும், பராசக்திக்கு 500 திரையரங்குகளும் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். முதல் நாளில் ஜனநாயகன் 700 திரையரங்குகளில் வெளியாகி, அடுத்த நாளில் அந்த எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தகவல் உலா வருகிறது.
இரண்டு படங்களும் பெரிய மார்க்கெட் கொண்ட நட்சத்திரங்களின் படங்கள் என்பதால், வசூல் குறித்து திரையரங்கு உரிமையாளர்களே கவலையுடன் பேசுகிறார்கள். 2023ஆம் ஆண்டு 'துணிவு' - 'வாரிசு' ஒரே நேரத்தில் வந்ததை ஒப்பிட்டு பார்க்கும் அவர்கள், "இந்த படங்கள் தனித்தனியாக ரிலீஸாகி இருந்தால், இரண்டுமே 150 கோடியை தாண்டியிருக்கும்" என்கிறார்கள். அதே நிலை இப்போது ஜனநாயகன் - பராசக்திக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கிறது.
இந்த எல்லா பரபரப்புக்கும் நடுவே இன்னொரு முக்கியமான சிக்கலும் உள்ளது. இரு படங்களுக்கும் திரையரங்கு ஒப்பந்தங்கள் நடந்து கொண்டிருந்தாலும், தணிக்கை சான்றிதழ் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. ஜனநாயகன் யுஏ சான்றிதழ் பெறும் என கூறப்பட்டாலும், மொழி அரசியல் பேசும் பராசக்திக்கு தணிக்கை குழுவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் பராசக்தி படக்குழு தற்போது மறு தணிக்கை குழுவின் பதிலை காத்திருக்கிறது.
இதற்கிடையில், ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் உணர்ச்சி இதில் அதிகமாக கலந்திருக்கிறது. மறுபக்கம், பராசக்தி சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கியமான மைல்கல் படம், அதுவும் சுதா கொங்கரா இயக்கம், ரவி மோகன் வில்லன் வேடம் என்பதால் எதிர்பார்ப்பு குறைவில்லை.
பெரிய எதிர்பார்ப்புகள், சவால்கள், அரசியல், தணிக்கை, திரையரங்குப் போட்டி என எல்லாவற்றையும் தாண்டி, இந்த பொங்கலில் உண்மையான வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கப் போவது ரசிகர்களும், வசூல் கணக்குகளும் தான். பொங்கல் விடுமுறைக்கு பிறகு தான் இந்த இரு படங்களின் உண்மையான தீர்ப்பு தெரிய வரும்.












Click it and Unblock the Notifications