Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம்

Subscribe to Oneindia Tamil

Slave Abolition
-புன்னியாமீன்

சில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால் அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில் அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினத்தையும் குறிப்பிட முடியும்.

ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23 ஆகஸ்ட் 1998ல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999ல் செனகல் நாட்டிலும் இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை நினைவு கூருகின்றன.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம் யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத் தொடரில் (29 C/40) பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29, 1998ம் தேதி இடப்பட்ட CL/3494 இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22ம் தேதி இரவும் ஆகஸ்ட் 23ம் தேதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி நாடு) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

ஆபிரிக்க - அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும், துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று பகர்கின்றன.

அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர் எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப் பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர" மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ"விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425), 2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை, எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது, எகிப்திய அடிமைகள் ஒப்பீட்டளவில் சுமாராக நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.

ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, 'அடிமைத் தனம்", இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின் பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர் காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.

உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்" எழுச்சியாகும்.

புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக் கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+