மே.வ: பாஜகவின் ஜீ பூம்பா வளர்ச்சி.. சரியாத செல்வாக்குடன் மமதா.. மலைக்க வைக்கும் புள்ளி விவரங்கள்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக பல்வேறு புள்ளி விவரங்களை முன்வைத்து சுட்டிக்காட்டப்படுகின்றன. உண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான செல்வாக்கு அதிகரித்து வருவதை நிராகரிக்க முடியாது என்கின்றன புள்ளி விவரங்கள்.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 6% வாக்குகளைப் பெற்றது. டார்ஜிலிங் தொகுதியில் பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் மட்டும் வெற்றி பெற்றார்.
2011-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளின் 34 ஆண்டு கால ஆட்சிக்கு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு கட்டியது. அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 289-ல் பாஜக போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. அப்போது பாஜக 4% வாக்குகளைப் பெற்றிருந்தது.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. அப்போது மேற்கு வங்கத்தில் பாஜக 2 லோக்சபா தொகுதிகளில் வென்றது. அந்த தேர்தலில் பாஜகவுக்கு 17% வாக்குகள் கிடைத்தன. மே.வங்கத்தில் வெற்றி பெற்ற பாபுல் சுப்ரியோ, எஸ்எஸ் அலுவாலியா இருவருமே மத்திய அமைச்சர்களாக்கப்பட்டனர்.
2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக 291 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்று வாக்கு சதவீதத்தை தக்க வைத்தது. அதாவது 2016 தேர்தலில் பாஜக 10.6% வாக்குகளைப் பெற்றிருந்தது.
2019 லோக்சபா தேர்தலில் பாஜக படுஅமோக வெற்றியை மேற்கு வங்கத்தில் பெற்றது. மொத்தம் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 18-ல் பாஜக வென்றது. அதன் வாக்கு சதவீதம் 41% ஆக உயர்ந்தது.
இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாஜக அமோக விஸ்வரூபத்தை மேற்கு வங்கத்தில் எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கையும் இதே பாணியில் பார்ப்போம்.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றது. அதன் வாக்கு சதவீதம் 31% ஆக இருந்தது. அப்போது சிங்கூர்- நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதல் திரிணாமுல் காங்கிரஸுக்கு கை கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது.
2011 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 184 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிகளின் ஆட்சி அதிகாரத்துக்கு முடிவுரை எழுதியது. திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 42 இடங்களில் வென்றது. இந்த கூட்டணியின் வாக்கு சதவீதம் 40% ஆக இருந்தது.
2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் தனித்தே தேர்தல் களத்தை எதிர்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 இடங்களில் 211-ல் அதிரடி வெற்றியைப் பெற்றது. அதாவது மொத்தம் 45% வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் அறுவடை செய்தது.
2019 லோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக மீண்டும் அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளை எல்லாம் கைப்பற்றியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது 22 இடங்களில் வென்றது. அதன் வாக்கு சதவீதத்தில் 1.25% மட்டுமே சரிவை சந்தித்தது.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் அவ்வளவு எளிதாக அசைத்துவிட முடியாது என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன.
மேற்கு வங்க மாநிலமானது டார்ஜிலிங்கை உள்ளடக்கிய மலை பிரதேசம், வடக்கு, மத்திய, ஜங்கல்மகால் மற்றும் தெற்கு பகுதி என 5 மண்டலங்களாக பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் மலைபிரதேசம், ஜங்கல்மகால், தெற்கு பெங்கால் ஆகியவை பாஜகவுடன் மோதும் போது திரிணாமுல் காங்கிரஸுக்கு மிக முக்கியமான பகுதிகள்.
டார்ஜிலிங் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் 2009-ல் பாஜக விஸ்வரூபம் காட்டி நிற்கிறது. டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பீகார் பகுதிகளில் 2009-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் 22% ஆக இருந்தது. 2019-ல் இது 54% ஆக அதிகரித்தது. இருந்தபோதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இதே பகுதியில் 2009-ல் 19% ஆக இருந்த வாக்கு சதவீதம் 2019-ல் 37% ஆக அதிகரித்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜங்கல்மகால் பகுதியில் 2009-ல் வெறும் 4% வாக்குகளைப் பெற்ற பாஜக 2019-ல் 47% வாக்குகளைப் பெற்றுள்ளது. சரி இந்த பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்கு என்ன தெரியுமா? 2009-ல் 19% ஆக இருந்த அதன் வாக்கு சதவீதம் 2014-ல் 46% ஆகவும் 2009-ல் 41% ஆகவும் உள்ளது.
தெற்கு பெங்காலில் 2009-ல் பாஜக 5% வாக்குகளை மட்டுமே பெற்றது. 2019-ல் 40% வாக்குகளை அறுவடை செய்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 2009-ல் 43% வாக்குகளையும் 2019-லல் 47% வாக்குகளையும் பெற்றிருக்கிறது.
ஜங்கல்மகால், தெற்கு பெங்கால் பிராந்தியங்களில் மட்டும் மொத்தம் 294-ல் 210 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. பொதுவாக தெற்கு பெங்காலில் அதிக இடங்களில் வெல்லும் கட்சிதான் மேற்கு வங்கத்தில் அரியாசனம் ஏற முடியும் என்கிற ஒரு தியரி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
ஆகையால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு திடீர் எழுச்சி என்கிற தோற்றம் இருக்கலாம். ஆனால் திரிணாமுல் காங்கிரஸுக்கு நிலையான வாக்கு வங்கி அங்கே சர்வ வல்லமையுடன் இருக்கிறது. அதை சாய்ப்பது என்பது அவ்வளவு சாத்தியமானதாக இருக்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications