கொரோனா மர்மங்கள் விலகுமா? பா. கிருஷ்ணன்
கொரோனா அல்லது கோவிட் 19 தொற்றின் அச்சுறுத்தலில் நாடே தத்தளிக்கிறது. இதில், இந்த அரசு செய்த தவறு, அந்த அரசு செய்த தவறு என்ற விமர்சனங்களே அதிகமாக ஊடகங்களில் இடம்பெறுகின்றனவே தவிர, இந்த மர்ம நோய் தொடர்பான பல கேள்விகள் இன்னும் எழுப்பப்படவில்லை!
தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனமும் மருத்துவ நிபுணர்களும் எச்சரித்து வருகிறார்கள். ஏற்கெனவே, அதன் தாக்கம் பிரிட்டனில் தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள். முதல் அலையின் தாக்கத்தில் வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை அறிந்தோம்.

இரண்டாவது அலையில் அத்தகைய இணை நோய் இல்லாதவர்களும் இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.
மூன்றாவது அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வுலகம். தற்போது மகாராஷ்டிரத்தில் 8000 குழந்தைகளுக்குத் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்று என்ற ஆபத்தைத் தவிர்ப்பது, தடுப்பது, தீர்ப்பது ஆகிய மூன்று வழிகள் குறித்து மருத்துவ அறிவியல் உலகம் தீவிரமாகச் சிந்தித்து பல கருத்துகளை முன் வைக்கின்றன. அவை எல்லாம் விரிவான தகவல்கள் மட்டுமின்றி அதிக நுட்பமானவையும் கூட.
பொதுவாக அரசுகள் முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றையே வலியுறுத்தி வருகின்றன. தொற்றுத் தாக்குதலுக்கு ஆளானோர் வீட்டிலேயே தனித்திருத்தல், கோவிட் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்துதல் என்ற நிலைகளை அடுத்து சிகிச்சை பெறுதல் என்பது அடுத்த கட்ட செயலாக உள்ளது.
இதைத் தொடர்ந்து மருத்துவ உலகம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்து நம் முன் பல கேள்விகள் எழுகின்றன. அவை கேள்விகள் சந்தேகங்கள் என்று கூறுவதை விட அச்சம் என்றே குறிப்பிடலாம்.
மருத்துவமனைகளில் கொரோனா தொற்றாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களின் நிலைமை மிகவும் மோசமானது. அவர்களில் ஏராளமானோர் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து வருகின்றனர். உயிரைப் பறிக்கும் வேறு எந்த நோயையும் விட மருத்துவர்களை அச்சுறுத்துவது கொரோனா மட்டுமே. புற்றுநோய் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவ நிபுணர்கள் அதே நோயால் பாதிக்கப்பட்டதாகப் பதிவுகள் ஏதுமில்லை. ஒரு வேளை ரேடியம் சிகிச்சை காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். உயிரைப் பறிக்கும் எச்ஐவி தொற்று கூட ரத்தத் தொடர்பு ஏற்பட்டால் ஒழிய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைப் பாதிப்பதில்லை என்பதே நிதர்சனம்.
ஆனால், கொரோனா தொடர்பாக சில கேள்விகள் தோன்றுகின்றன. அதில் கவலைக்குரிய விஷயம் மருத்துவக் கழிவுகள்தான். சிகிச்சைகளின்போது பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட கழிவுகளை அழிப்பதற்கு மருத்துவ உலகில் என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை குறித்து முறையாக அறிவிக்கப்படுகின்றனாவா?
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் அந்த மருத்துவக் கழிவுகளை எப்படிக் கையாள்கின்றன என்ற விவரமும் அவை எப்படி அழிக்கப்படுகின்றன என்ற தகவலும் இதுவரை வெளியானதாகத் தெரியவில்லை. அத்துடன் உயிரைக் கொடுத்து பாடுபடும் மருத்துவர்கள், களப் பணியாளர்கள் அகற்றும் கவச உடைகள் போன்றவை எப்படி அழிக்கப்படுகின்றன?
கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்போர் மூலம் தொற்று பரவுவது சாத்தியமில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு சிலர் உயிரிழந்தபோது, அந்த சடலங்களை புதைக்கவோ, எரிக்கவோ இயலாமல் போன அவல நிலை குறித்து பிரச்சினை எழுந்தபோது மருத்துவ உலகம் இவ்வாறு விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம். அதில் மாற்றுச் சிந்தனை தற்போது உள்ளதா எனத் தெரியவில்லை.
தொற்றினால் இறந்தவர் மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்பில்லை என்று கூறும்போது, அந்தச் சடலங்கள் ஏன் அப்படியே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
எல்லாவற்றையும் விட கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடல்கள் பிளாஸ்டிக் உறையில் சுற்றி எரியூட்டப்படுகின்றன. அல்லது அடக்கம் செய்யப்படுகின்றன. தொற்றுக் கிருமி அவ்வாறு எரியூட்டப்படும்போது தீயில் அழிந்து விடுகிறதா அடக்கம் செய்யப்படும்போது மண்ணில் மக்கி விடுகிறதா என்ற சந்தேகம் இன்னும் தீர்க்கப்படவில்லை.
மிக முக்கியமானது, கொரோனா தொற்றில் இறந்தவர் உடல் பிளாஸ்டிக் சுற்றி எரிக்கப்படுகிறது அல்லது மண்ணில் புதைக்கப்படுகிறது. அப்போது பிளாஸ்டிக் உறை அகற்றப்படுவதில்லை.
பொதுவாக, பிளாஸ்டிக்கை எரிப்பதால் வளிமண்டலம் மாசுபடும் ஆபத்து உள்ளது என்றும், பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் அது மக்காது, மாறாக பல ஆண்டுகளாக அது மாசு ஏற்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இப்படி இருக்க தொற்றுக்கு ஆளானவரின் சடலத்தை பிளாஸ்டிக்கில் சுற்றி எரியூட்டும்போது, மண்ணில் அடக்கம் செய்யும்போதும் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு ஆபத்து உள்ளதை மருத்துவ உலகம் கவனிக்கவில்லையா அல்லது அந்த பிளாஸ்டிக் மூலம் ஆபத்தில்லையா என்ற சந்தேகத்துக்கு விளக்கம் கிடைக்கவில்லை.
கொரோனா ஒரு மர்மமான தொற்று கடந்த ஓராண்டு காலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த மர்மத்தை விலக்குவதற்கு அறிவியல் ஆய்வு உலகம் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. அதன் அர்ப்பணிப்பு குறித்து எவ்வித ஐயமும் இல்லை.
கொரோனோ தொற்று உலகில் முழுமையாக அழிக்கப்படும் காலம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், தொற்று பாதிப்புகள் தொடர்பான கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் உள்ளதா தெரியவில்லை.












Click it and Unblock the Notifications