ஐரோப்பாவிடமிருந்து 'பறக்கும் டேங்கர்களை' வாங்கும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே.கான்

ஆயுதக் கொள்முதல் விஷயத்தில் மீண்டும் ஒரு முறை ரஷ்யாவிடமிருந்து கொஞ்சம் விலகி வந்துள்ளது இந்தியா.

பறந்து கொண்டிருக்கும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரம்பும் டேங்கர் விமானங்களை முதலில் ரஷ்யாவிடமிருந்து வாங்கத் திட்டமிருந்த இந்தியா, இப்போது அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. ரஷ்யாவுக்குப் பதிலாக இதை ஐரோப்பாவின் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கான ஆயுத விற்பனையில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் முதலிடத்தில் இருந்தது ரஷ்யா. பின்னர் அதை இந்தியா படிப்படியாகக் குறைக்க ஆரம்பித்தது. குறிப்பாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவுக்கு போர் விமானங்கள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தர முன் வந்திருப்பதால், ரஷ்யா மீதான தனது சார்பு நிலையை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்துள்ளது.

பறக்கும் டேங்கர்கள்:

பறக்கும் டேங்கர்கள்:

இந்த வகையில் தான் இப்போது ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 330 எம்ஆர்டிடி என்ற பறக்கும் டேங்கர்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது. முதலில் ரஷ்யாவிடம் இருந்து அதன் இலூசின்-78 ரக பறக்கும் டேங்கர்களை வாங்கவே இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பரீதியில் பல மடங்கு சிறப்பான ஏர் பஸ் டேங்கர்களை வாங்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது என்ன பறக்கும் டேங்கர்கள்?:

அது என்ன பறக்கும் டேங்கர்கள்?:

போர்க் காலத்தில் ஒரு போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது அதை தரையிறக்காமலேயே அதற்கு எரிபொருள் நிரப்ப உதவுபவை தான் இந்த டேங்கர்கள். வானிலேயே இந்த இரு விமானங்களும் அருகருகே பறந்து, டேங்கரில் இருந்து பைப்பை போர் விமானத்தின் டேங்கில் இணைத்து எரிபொருளை நிரப்ப முடியும்.

அவசியம் என்ன?:

அவசியம் என்ன?:

இதற்கான அவசியம் என்ன என்று கேட்கலாம். போர்க் காலங்களில் வெடிகுண்டுகள், ஏவுகணைகளை எடுத்துக் கொண்டு எதிரி நாட்டை நோக்கி அல்லது எதிரி நாட்டுக்குள் இந்த விமானங்கள் பறக்கையில், எரிபொருள் நிரப்புவதற்காக மீண்டும் நீண்ட தூரம் திரும்பி வர வேண்டும். இதனால் இந்த விமானங்களின் தாக்குதல் நேரம் வீணாகும். இதைத் தவிர்க்கவே நடுவானில் வைத்தே டேங்கர்களைக் கொண்டு எரிபொருள் நிரப்பப்படுகிறது.

அதிக ஆயுதங்களை கொண்டு செல்லலாம்...

அதிக ஆயுதங்களை கொண்டு செல்லலாம்...

எந்த ஒரு விமானமும் டேக்-ஆப் செய்யும்போது அதன் எடை அதன் என்ஜின் திறனுக்கு உட்பட்டு ஒரு அளவுக்குள் தான் இருக்க வேண்டும். ஒரு போர் விமானம் மிக அதிகமான ஆயுதங்களுடன் டேக்-ஆப் செய்யும்போது அதன் எடை மிக மிக அதிகமாக இருக்கும். இதனால் எடையைக் குறைக்க எரிபொருளின் அளவு குறைக்கப்படுகிறது. அல்லது நீண்ட தூரம் சென்று தாக்கும் விமானமாக இருந்தால் அதிக அதிக எரிபொருளை நிரப்பிவிட்டு அதில் இணைக்கப்படும் வெடிகுண்டுகள், ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால் அந்த விமானத்தின் முழுத் திறனை பயன்படுத்த முடிவதில்லை.

இதைத் தவிர்க்க அதிக ஏவுகணைகள், வெடிகுண்டுகளுடன் அதே நேரத்தில் குறைந்த எரிபொருளுடன் போர் விமானத்தை டேக் ஆப் செய்ய வைத்துவிட்டு, பின்னர் உடனடியாக வானில் வைத்தே அதற்குத் தேவையான எரிபொருளை நிரப்பவும் இந்த டேங்கர்கள் உதவுகின்றன.

அதிக வீரர்களையும் ஏற்றிச் செல்லலாம்:

அதிக வீரர்களையும் ஏற்றிச் செல்லலாம்:

போர் விமானங்களுக்கு மட்டுமல்ல, வீரர்களை ஏற்றிச் செல்லும் ராணுவத்தின் மிகப் பெரிய சரக்கு விமானங்களுக்கும் கூட இந்த டேங்கர்களைக் கொண்டு எரிபொருள் நிரப்ப முடியும். எரிபொருளை குறைவாக வைத்துக் கொண்டு, அதிக வீரர்களை ஏற்றிக் கொண்டு டேக் ஆப் செய்துவிட்டு, பின்னர் வானில் வைத்து எரிபொருள் போட்டுக் கொண்டு பறக்கலாம். இதற்கும் இந்த டேங்கர் விமானங்கள் உதவுகின்றன.

முதன் முதலில்...

முதன் முதலில்...

முதன்முதலில் இந்த நடுவானில் எரிபொருள் நிரம்பும் சாகஸம் நிகழ்த்தப்பட்டது 1923ம் ஆண்டில் தான். அமெரிக்க விமானப் படையின் இரு டிஎச்-4பி விமானங்கள் வானில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எரிபொருளை டிரான்ஸ்பர் செய்தன.

1929ம் ஆண்டில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த மேஜர் கார்ல் ஸ்பாட்ஸ் என்பவர் தலைமையிலான ஒரு டீம் வானிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு தொடர்ந்து 150 மணி நேரம் பறந்து காட்டி சாதனை படைத்தது.

27 நாட்கள்:

27 நாட்கள்:

பின்னர் ஜான், கென்னத், வால்டர், ஆல்பர்ட் ஆகியோர் இணைந்து 553 மணி நேரம் தரையிறங்காமலேயே பறந்து காட்டினர். இந்த சாதனைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக முறியடித்தனர் பிரட் மற்றும் அல் கே என்ற இரு சகோதரக்கள். இவர்கள் வானிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு தொடர்ந்து 27 நாட்கள் பறந்து காட்டினர். இது நடந்தது 1935ம் ஆண்டில்.

வியட்நாம், ஈராக் போர்களில்..

வியட்நாம், ஈராக் போர்களில்..

பின்னர் இந்த நடுவான் எரிபொருள் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறிவிட, வியட்நாம் போரிலும், பின்னர் குவைத்தை விடுவிக்க ஈராக்குடன் நடந்த போரிலும் இந்த டேங்கர் விமானங்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானப் படைகளால். அதே போல அர்ஜென்டினாவுடனான பாக்லாந்து போரில் இங்கிலாந்து போர் விமானங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டன.

24 மணி நேரமும் பறந்து கொண்டிருந்த அணு ஆயுதங்கள்..

24 மணி நேரமும் பறந்து கொண்டிருந்த அணு ஆயுதங்கள்..

அதே போல அமெரிக்கா-சோவியத் யூனியன் இடையே பனிப் போர் உச்சத்தில் இருந்த நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் அணு ஆயுதங்களுடன் சோவியத் யூனியனைச் சுற்றி 24 மணி நேரமும் பறந்து கொண்டே இருந்த சம்பவமும் நடந்தது. இவற்றுக்கு டேங்கர்கள் தொடர்ந்து வானில் எரிபொருளை நிரப்பிக் கொண்டே இருந்தன.

1986ம் ஆண்டில் லிபியா மீது தாக்குதலை நடத்த தனது போர் விமானங்களுக்கு நடுவானில் தான் எரிபொருள் நிரப்பியது அமெரிக்கா. காரணம், லிபியா மீது தாக்குதல் நடத்தச் செல்லும் விமானங்கள் தங்களது நாட்டின் மீது பறக்க பிரான்சும், ஸ்பெயினும் அனுமதிக்கவில்லை. இதனால் ஐரோப்பாவை தென் மேற்காக சுற்றிக் கொண்டு, ஐபீரிய தீபகற்கத்தைத் தாண்டிச் சென்று தாக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

ஹெலிகாப்டர்களுக்கும் பயன்படுத்தலாம்..

ஹெலிகாப்டர்களுக்கும் பயன்படுத்தலாம்..

இந்த டேங்கர்களைக் கொண்டு போர் விமானங்கள், வீரர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள், சரக்கு விமானங்கள் மாத்திரமல்லாமல் ஹெலிகாப்டர்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியும். இதனால் நவீனப் போர்களில் இந்த டேங்கர் விமானங்களின் முக்கியத்துவம் மிக மிக அதிகமாகிவிட்டது.

மீண்டும் வாங்குகிறது இந்தியா:

மீண்டும் வாங்குகிறது இந்தியா:

இந் நிலையில் தான் இந்த டேங்கர் விமானங்களின் அவசியம் கருதி அதை இந்தியாவும் வாங்கியது. 2003ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து 6 இலூசின் டேங்கர்களை வாங்கி அதை இந்தியா பயன்படுத்தி வருகிறது.

இந் நிலையில் மேலும் 6 டேங்கர்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. முதலில் இதை மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கவேத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் இலூசின் 78 ரக டேங்கர் விமானங்கள் உலகின் மிகப் பெரிய விமானங்களில் ஒன்று. அதே நேரத்தில் இதை இந்தியாவுக்கு வழங்க ஐரோப்பாவின் EADS (European Aeronautics Defence and Space Company) நிறுவனமும் முன் வந்தது. இதையடுத்து இந்த இரு டேங்கர் விமானங்களையும் இந்திய விமானப் படையினர் மீண்டும் சோதனையில் ஈடுபடுத்தினர்.

வென்றது EADS Airbus-330 MRTT:

வென்றது EADS Airbus-330 MRTT:

இதில் 4 என்ஜின்களைக் கொண்ட இலூசினை விட இரண்டே என்ஜின்கள் கொண்ட ஏர் பஸ் டேங்கர்களே சிறப்பானவை என்ற முடிவுக்கு இந்திய விமானப் படை நிபுணர்கள் வந்துள்ளனர். ஒவ்வொன்றும் ரூ. 1,400 கோடி என்ற மதிப்பில் மொத்தம் 6 டேங்கர் விமானங்களை ரூ. 8,500 கோடிக்கு இந்தியா வாங்கவுள்ளது. இந்த விமானத்தால் 110 டன் எரிபொருளை ஏந்திக் கொண்டு பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஒரே நேரத்தில் பல விமானங்களுக்கும் எரிபொருளை நிரப்ப முடியும். ஒரு நிமிடத்துக்கு 4,600 லிட்டர் எரிபொருளை போர் விமானத்துக்கு செலுத்தும் திறன் கொண்டது இந்த விமானம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+