சந்திரயான் ஆய்வாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளமே தரலையாம்.. தீயாக பரவும் தகவல்! உண்மை என்ன தெரியுமா
டெல்லி: பிரபல யூடியூபர் ஒருவர் இஸ்ரோ அமைப்பில் பணிபுரிவோருக்குக் கடந்த 3 மாதங்களாகச் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது உண்மை தானா என்பதைப் பார்க்கலாம்.
இஸ்ரோ கடந்த மாதம் வெற்றிகரமாகச் சந்திரயான் 3 சாட்டிலைட்டை அனுப்பினார்கள். இந்தியா நிலவு குறித்து ஆய்வு செய்ய அனுப்பும் 3ஆவது சாட்டிலைட் இதுவாகும். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம்.

அடுத்த வாரம் சந்திரயான் 3 சாட்டிலைட் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் லூனா 25, சந்திரயான் 3 இரண்டும் அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.
சந்திரயான் 3: பிரபல யூடியூபரான பீர்பைசெப்ஸ் என்பவர் தி ரன்வீர் ஷோ என்ற ஒரு பாட்கேஸ்ட் எபிசோட்டை நடத்தி வருகிறார். அதில் சுதந்திர தினத்தன்று ஒலிபரப்பான சிறப்பு நிகழ்ச்சியில் தெஹ்சீன் பூனவல்லா என்பவர் கலந்து கொண்டார். அதில் அவர் இஸ்ரோ ஆய்வாளர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று பகீர் தகவலைக் கூறினார். அது மட்டுமின்றி அவர் தான் கூறியதை முடிந்தால் பொய் என நிரூபிக்கலாம் என்றும் சவால் விடுத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பூனவல்லா, "இஸ்ரோ ஆய்வாளர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. இது நியாயமா? இதுதான் இப்போதுள்ள அரசுடன் எனக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை.. இஸ்ரோவைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அது ஒரு பெரிய அமைப்பு. ஆனால், அங்கும் கூட ஆய்வாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
பொய்யான கருத்துகள்: தெஹ்சீன் பூனவல்லா என்பவர் தான் இந்த பகீர் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பிரபல தொழிலதிபரும் பொலிடிகல் அனலிஸ்ட்டான இவர், இந்தி டிவி ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 13இல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றனர். இவர் தான் இந்த பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், தான் கூறியதை முடிந்தால் பொய் என நிரூபிக்கலாம் என்று அவர் சேலஞ்சும் செய்திருந்தார்.
இதற்கிடையே மத்திய அரசின் பேக்ட் செக் பிரிவான பிஐபி அமைப்பு இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ ஆய்வாளர்களுக்குக் கடந்த ஜூலை மாத சம்பளம் வரை முறையாக அளிக்கப்பட்டுள்ளதாக பிஐபி விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரோ ஆய்வாளர்களுக்குக் கடைசி 3 மாதங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்பது பொய்யான ஒரு தகவல் என்பது உறுதியாகிறது.
இதற்கிடையே தெஹ்சீன் பூனவல்லாவின் இந்தக் கருத்துக்கு பாஜகவில் இருந்தும் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர் ஆதாரமே இல்லாமல் இதுபோல பேசி வருவதாகவும் இஸ்ரோவில் பணிபுரியும் எதாவது ஒரு ஆய்வாளருக்கு ஒரு மாத சம்பளம் வழங்கவில்லை என்பதை தெஹ்சீன் பூனவல்லாவால் நிரூபிக்க முடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மோடி அரசின் சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோல சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர்கள் சாடி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
இஸ்ரோ அமைப்பில் பணிபுரிவோருக்குக் கடந்த 3 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.
முடிவு
இது முற்றிலும் பொய்யான தகவல் என்பதை மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications