"கோடையை சமாளிக்க கோமியம்.." பாஜக அண்ணாமலை எழுதியதாக இணையத்தில் பரவும் போலி கடிதம்! நம்பாதீங்க
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீர் மோர்ப் பந்தல் அமைப்பது குறித்து எழுதியதாகக் கூறிய கடிதம் வேகமாகப் பரவி வருகிறது. அது உண்மையா என்ன என்பது குறித்துப் பார்ப்போம்
இந்த இணைய உலகில் பொய்யான தகவல்கள் வேகமாகப் பரவுகிறது. உண்மையைக் காட்டிலும் பொய்யான தகவல்களே சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
முன்பெல்லாம் தேர்தல் காலங்களில் போலி தகவல்கள் பரவும். ஆனால், இப்போதெல்லாம் தேர்தல் காலம் என்று இல்லாமல், எப்போதும் இந்த பொய்யான தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது.

கோடைக் காலம்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கிறது. கோடைக் காலம் ஆரம்பிக்கும் முன்பே, கடந்த பிப், மார்ச் மாதங்களிலேயே வெப்பம் உச்சம் தொட்டது. மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் சதமும் அடித்தது. வரும் காலங்களில் வெப்பம் மிக மோசமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

என்ன செய்யலாம்
மேலும், கோடைக் காலத்தில் இருந்து தப்பிக்க மருத்துவர்கள் பல பரிந்துரைகளையும் அளித்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் காலத்தில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மேலும், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலை நம்மால் எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

பாஜக
இதற்கிடையே இணையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுதியதாக ஒரு கடிதம் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் லெட்டர் பேட் போன்றும் அது இருக்கிறது. இணையத்தில் பரவும் அந்த கடிதத்தில், "சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க தயாராவோம். எந்த ஒரு நிலையிலும் மக்கள் பணி செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்படுபவர்கள் பாஜக தொண்டர்கள் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கடிதம்
கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள வெயில் காலமிது மக்களின் வெப்ப சூட்டை போக்கப் பலரும் நீர் மோர் பந்தல்களைத் திறப்பார்கள். ஆனால் நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டைப் போக்கும் விதத்திலும் அதேசமயம் உடல் பிணிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவர வேண்டும்" என்று அதில் இருக்கிறது.

உண்மை என்ன
மேலும், "என்றும் தேசப் பணியில்" என்று போட்டு அதன் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கையெழுத்தும் இருப்பது போல அதில் உள்ளது. இந்த கடிதத்தை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இது குறித்து நாம் விசாரித்துப் பார்த்ததில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் அப்படியொரு கடிதம் வெளியிடவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இணையத்தில் சிலர் திட்டமிட்டு இந்த பொய்யான கடிதத்தைப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீர் மோர் பந்தல் அமைப்பது குறித்து எழுதியதாகக் கூறிய கடிதம் வேகமாகப் பரவி வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீர் மோர் பந்தல் அமைப்பது குறித்து எழுதியதாகக் கூறிய கடிதம் வேகமாகப் பரவி வருகிறது.
முடிவு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் அப்படியொரு கடிதம் வெளியிடவே இல்லை.












Click it and Unblock the Notifications