FACT CHECK: முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் குடித்த கடை.. நஷ்டத்தால் மூடப்பட்டதா? உண்மைதான் என்ன?
சென்னை: ஆவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு தேநீர் குடித்த கடை நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மை தன்மை என்ன என்று அலசுவோம்.
ஸ்டாலின் குடித்த தேநீர்: கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் குடித்தார். அவரோடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி அப்போது தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியானது தமிழ்நாடு செய்தித்துறையின் சார்பில் புகைப்படத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகம் ஒன்றில் வெளியானதைபோல் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பகிரப்படும் தகவல்: அதில், ஆவடி உள்ள சாலையோர கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் அருந்தும் புகைப்படம் மற்றும் ஒருவர் டீக்கடையை மூடும் புகைப்படத்தை பதிவிட்டு "ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் அதன் கீழே 2022 ஆம் ஆண்டு பிப்ரவை 13 என்ற தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

ரிட்டயர்டு வில்லன் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் ஐடி வெளியிட்டு இருக்கும் இந்த பதிவை சுமார் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளார்கள். 1,850 பேர் லைக் செய்துள்ளனர். 500 க்கும் அதிகமான நபர்கள் ரீட்வீட் செய்துள்ளனர். இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த செய்தியின் உண்மை தன்மையை ஆராய முற்பட்டோம்.
உண்மை என்ன: அந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்தில் இதுபோன்ற பதிவு வெளியிடப்பட்டு உள்ளதா என்று பார்த்தோம். குறிப்பாக அதில் இடம்பெற்று இருக்கும் தேதியில் அந்த பதிவு உள்ளதா என்று தேடினோம். ஆனால், இதுபோன்ற படம் அதில் இல்லை. முக்கியமாக பகிரப்படும் படத்தில் எழுத பயன்படுத்தப்பட்டு இருக்கும் எழுத்து வடிவமும், அந்த ஊடகம் பயன்படுத்தும் எழுத்து வடிவமும் வேறு.

தொடர்ந்து இதுகுறித்து இணையதளத்தில் தேடியபோது, கடந்த 2022 பிப்ரவரி மாதமே இந்த படத்தை அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போதே சம்பந்தப்பட்ட ஊடகம் இந்த செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் அதே படத்துடன் மீண்டும் வதந்தி பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் வதந்தி என்றும், அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்ற முடிவுக்கு வருகிறோம்.

Fact Check
வெளியான செய்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் குடித்த கடை நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
முடிவு
சமூக ஊடகங்களில் பரவும் படம் போலியானது. ஊடகத்தில் அதுபோல் எந்த செய்தியும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications