ரூ.50 கோடி.. ராமர் கோவிலுக்கு நன்கொடையை வாரி வழங்கிய நடிகர் பிரபாஸ்? பரவும் தகவல் உண்மையா
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு நடிகர் பிரபாஸ் ரூ.50 கோடி நன்கொடை வழங்கி உள்ளதாகவும், கும்பாபிஷேக தினத்தில் அவர் உணவு செலவுகளை அவர் ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் உண்மையில் நடிகர் பிரபாஸ் அப்படி செய்தாரா? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா கட்டடக்கலையில் இந்த கோவில் என்பது கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட பணிகள் என்பது முடிவடைந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து இந்தியாவில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். தற்போது கும்பாபிஷேகத்துக்கான முந்தைய சடங்குகள், பூஜைகள் கோவிலில் தொடங்கி உள்ளன. கடந்த 16ம் தேதி இந்த பூஜை, சடங்குகள் தொடங்கிய நிலையில் வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராமர் கோவிலுக்கு ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது அயோத்தி ராமர் கோவிலுக்கு நடிகர் பிரபாஸ் ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் ஆகும் உணவுக்கான செலவை அவர் ஏற்க முன்வந்துள்ளார் என்ற செய்திகள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. நடிகர் பிரபாஸ் பற்றி வெளியாகி உள்ள இந்த செய்தி என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இருப்பினும் நடிகர் பிரபாஸ் தரப்பு மற்றும் அயோத்தி ராமர் கோவில் தரப்பில் இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை. இதனால் இந்த விஷயத்தில் சந்தேகம் என்பது எழுந்தது. அதேநேரத்தில் நடிகர் பிரபாஸ் குறித்த இந்த செய்தி என்பது இணையதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அதன் உண்மை தன்மையை ஆராய இந்தியா டூடே செய்தி நிறுவனம் நடிகர் பிரபாஸின் குழுவிடம் பேசி உள்ளது.
அப்போது நடிகர் பிரபாஸ் ரூ.50 கோடி நன்கொடை அளித்ததாக கூறப்படும் செய்தி மற்றும் கும்பாபிஷேக நாளில் அவர் உணவுக்கான செலவை ஏற்பதாக பரப்பப்படும் செய்தியை மறுத்துள்ளனர். இதன்மூலம் இந்த செய்திகள் என்பது வதந்தி என தெரியவந்தது. மேலும் இத்தகைய தகவல் போலியாக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதும் உறுதியாகி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நடிகர் பிரபாஸ் ராமர் கோவிலுக்கு ரூ.50 கோடி நன்கொடை வழங்கி உள்ளதாகவும், கும்பாபிஷேக நாளில் உணவுக்கான செலவை ஏற்றுள்ளதாகவும் செய்தி வெளியானது.
முடிவு
ரூ.50 கோடி நன்கொடை, உணவுக்கான செலவை பிரபாஸ் ஏற்பதாக பரவும் தகவலை நடிகர் பிரபாஸின் குழுவின் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications