Fact check: ஈரோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? எடிட் செய்து பரப்பப்படும் பொய் செய்தி
ஈரோடு: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஈரோடு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், விடுமுறை என்று எடிட் செய்து போலியான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை போதுமான அளவுக்கு பெய்திருந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வடதமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மெல்ல சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. எனவே, கனமழைக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து விடுத்திருந்த அறிவிப்பில், "இன்று (அக்.15)திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (16ம் தேதி) வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
17ம் தேதி வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரித்திருந்தது.
எனவே முன்னெச்சரிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மதியம் வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது புதியதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சொல்லப்பட்டது. இது தவறான செய்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
முடிவு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று எடிட் செய்து பொய் செய்தி பரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications