Fact Check: புர்காவுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தலா! இந்தியாவில் அல்ல.. வங்கதேசத்தில்!
டெல்லி: புர்காவுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், அது இந்தியாவில் நடந்தது இல்லையென்று Fact Check செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்திருக்கிறது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு, சமூக வலைத்தளங்கள் மூலம் ஏறத்தாழ அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்துள்ளது என்றே சொல்லலாம். இதன் மூலம், அரசின் அறிவிப்புகள், நலத்திட்டங்கள், இதர விஷயங்கள் அனைத்தும் எளிதில் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்களுக்கும் சென்று சேர்கிறது. ஆனால் இத்துடன் வதந்திகளும், தவறான தகவல்களும் சென்று சேர்கின்றன.

குறிப்பாக, மத ரீதியிலான அவதூறுகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன. இது அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டே பரப்பப்படுகிறது. எனவே, உண்மை எது? போலி எது என்பதை பிரித்து பார்க்க முடியாமல் மக்கள் போலியை நிஜெமென நம்பி வருகின்றனர்.
இந்த போலி செய்தி வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்று இணைந்திருக்கிறது. அதாவது, பெண் வேடத்தில் புர்கா அணிந்த இளைஞர் ஒருவர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார். இது இந்தியாவில் நடந்தது என்று குறிப்பிட்டு, இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த Fact Check செய்த செய்தி ஊடகங்கள், வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, அதை இந்தியாவில் நடந்ததை போன்று சித்தரித்து பரப்பி உள்ளதாக கூறியுள்ளன.
அதாவது அயுதம் ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சிலரை பரிசோதிக்கின்றனர். சோதனையின்போது ஒரு இளம்பெண்ணும், அவருடன் வந்த கர்பிணி ஒருவரையும் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து கர்ப்பிணியின் புர்க்காவை கழற்ற சொல்கின்றனர்.
அப்போதுதான் புர்கா அணிந்து வந்தது பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்திருக்கிறது. மட்டுமல்லாது அவர் தனது உடலில் சட்டவிரோத போதை பொருளை மறைத்து கடத்தியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோதான், 'இந்தியாவில் இஸ்லாமியர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள்' என்று சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேர் செய்யப்படுகிறது.
இது குறித்த Fact Check பரிசோதனையில் இந்த வீடியோ உண்மை என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால், இது இந்தியாவில் நடந்தது கிடையாது. வங்கதேசம் சிட்டகாங் நகரில் உள்ள ரௌசானில் நடந்தது. கடந்த 2021ம் ஆண்டு, மார்ச் மாதம் 11ம் தேதி இது நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவில் புர்க்காவில் மறைத்து இஸ்லாமியர்கள் போதைப்பொருளை கடத்துகின்றனர்.
முடிவு
இஸ்லாமியர்கள் போதைப்பொருளை கடத்துவதாக வெளியான வீடியோ, இந்தியாவில் நடந்தது கிடையாது. வங்கதேசத்தில் நடந்தது.












Click it and Unblock the Notifications