Factcheck: ஒடிசா ரயில் விபத்துக்கு மதசாயம்.. ஸ்பாட் அருகே இருப்பது மசூதியா? கோவிலா? உண்மை இதுதான்
பெங்களூர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 294 பேர் இறந்த நிலையில் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் உறைய வைத்துள்ள இந்த ரயில் விபத்துக்கு மசூதி தான் காரணம் என்ற வகையில் சர்ச்சையாக பதிவிட்ட பாஜக பெண் நிர்வாகியால் சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் பாஹானகா என்ற இடத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.
இந்த ரயில் பெட்டிகள் பக்கத்தில் உள்ள டிராக்கில் விழுந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது. இந்த ரயில் விபத்தில் 294 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ரயில் விபத்துக்கு மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம். விபத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதற்கிடையே தான் ரயில் விபத்துக்கு மதசாயம் பூச சிலர் முயன்று வருகின்றனர்.

அதாவது ரயில் விபத்து நடந்த இடத்தில் வெள்ளை நிற கட்டடம் உள்ளது. அந்த கட்டடத்தை மசூதி எனக்கூறி சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி விடுகின்றனர். The Random Indian எனும் பெயரில் ட்விட்டரை பயன்படுத்தும் நபர் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட படத்துடன் அதன் அருகே உள்ள கட்டடத்தை மசூதி எனக்கூறி சனிக்கிழமை ட்வீட் செய்திருந்தார். அதில் ‛‛நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை' என தெரிவித்து இருந்தார். இதன்மூலம் ரயில் விபத்துக்கு மசூதி தான் காரணம் எனும் வகையில் அவர் பதிவிட்டு இருந்தார். இதேபோல் பாஜகவை சேர்ந்த சிலரும் இந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இதனால் உஷாரான ஒடிசா அரசு ‛‛ரயில் விபத்துக்கு மதசாயம் பூசும் வகையில் செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா என்பது மதசார்பற்ற நாடு. தற்போதைய ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது'' என எச்சரித்துள்ளது. மேலும் ரயில் விபத்து தொடர்பாக மதசாயம் பூசும் வகையில் பதிவிட்ட நபர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தான் ரயில் விபத்து நடந்த இடத்தில் இருப்பது மசூதி இல்லை. அது கோவில் என சிலரும் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இது விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து இந்த விஷயத்தில் உண்மை நிலை என்ன? என்பது பற்றிய ஆய்வு தொடங்கியது. அப்போது ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் மேல் இருந்து ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் பல செய்தி சேனல்களில் வெளியாகி இருந்தன. அதனை உற்றுகவனித்தால் விபத்து ஸ்பாட்டில் இருப்பது மசூதி இல்லை என்பதும், அது இஸ்கான் கோவில் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதனை சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்களும் உறுதி செய்துள்ளனர். அதோடு ‛ஆல்ட் நியூஸ்' உள்ளிட்ட சில பேக்ட்செக் இணையதளங்களும் சம்பவ இடத்தில் இருப்பது மசூதி இல்லை. அது இஸ்கான் கோவில் என்பதை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே தான் போலீசாரும் விபத்துக்கு குறிப்பிட்ட மதத்தை வைத்து சாயம் பூச வேண்டாம் எனவும், இவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தின் அருகே மசூதி இருப்பதாக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
முடிவு
இந்த செய்தியின் உண்மையில்லை. ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தின் அருகே இருப்பது இஸ்கான் கோவில்.












Click it and Unblock the Notifications